தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை


தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை
x
தினத்தந்தி 3 Feb 2017 10:30 PM GMT (Updated: 2017-02-04T00:14:27+05:30)

தைப்பூச திருவிழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து பாதயாத்திரையாக செல்கின்றனர்.

திருப்பத்தூர்,

பாதயாத்திரை

தைப்பூச திருவிழா வருகிற 9–ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் முருகன் கோவிலுக்கு காவடி எடுத்தும், பாதயாத்திரையாகவும் பக்தர்கள் செல்கின்றனர். இந்தநிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டனர். காரைக்குடியை சேர்ந்த நகரத்தார்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதயாத்திரையாக காவடி எடுத்து சென்றனர். இதேபோல் காரைக்குடியை அடுத்த மணச்சை பகுதியை சேர்ந்த குருசாமி முருகுசோலை, சண்முக சேவா சங்க தலைவர் சுப்பையா ஆகியோர் தலைமையிலான பாளையநாட்டார்கள் காவடி எடுத்து பாதயாத்திரையாக பள்ளத்தூரிலிருந்து புறப்பட்டனர். இதில் குன்றக்குடி, நேமத்தான்பட்டி, கானாடுகாத்தான், பள்ளத்தூர், கொத்தரி, மணச்சை, வடகுடி, காரியபட்டி, கண்டனூர், பாளையூர், வேலங்குடி, கோட்டையூர், காரைக்குடி, கழனிவாசல், ஒ.சிறுவயல் ஆகிய ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காவடி எடுத்து பாதயாத்திரையாக பழனிக்கு செல்கின்றனர்.

வரவேற்பு

முன்னதாக இவர்கள், குன்றக்குடி மலைமேல் சென்று சண்முகநாத சாமியிடன் தரிசனம் பெற்று, இடும்பன் சன்னதியில் தீபாரதனை காட்டப்பட்டு மலை அடிவாரத்தில் இருந்து பயணத்தை தொடர்ந்தனர். பின்னர் பாதயாத்திரை பக்தர்கள் பிள்ளையார்பட்டி, வைரவன்பட்டி வழியாக நேற்று திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலுக்கு வந்தடைந்தனர். அங்கு திருக்கோவில் வாசலில் ஏராளமான பெண்கள் பக்தர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதேபோல் தேவகோட்டையில் இருந்தும் பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரையாக பழனிக்கு புறப்பட்டனர்.


Next Story