சிறைவாசலில் போலீசாரிடம் இருந்து தப்பிய வழக்கு; கைதிக்கு கடுங்காவல் தண்டனை


சிறைவாசலில் போலீசாரிடம் இருந்து தப்பிய வழக்கு; கைதிக்கு கடுங்காவல் தண்டனை
x
தினத்தந்தி 3 Feb 2017 11:00 PM GMT (Updated: 3 Feb 2017 1:34 PM GMT)

ராமநாதபுரத்தில் வழக்கு ஒன்றில் கைதாகி சிறைவாசலில் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிய வழக்கில் கைதிக்கு 8 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை

ராமநாதபுரம்,

கொலைமிரட்டல்

தேவிபட்டினம் வடக்குத்தோப்பு பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவருடைய மகன் கதிரேசகுமார்(வயது32). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த தியாகராஜன்(58) என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கதிரேசகுமார் கடந்த அக்டோபர் மாதம் 14–ந் தேதி இந்த பிரச்சனை தொடர்பாக தியாகராஜனை வழிமறித்து கொலைமிரட்டல் விடுத்தாராம்.

இதுதொடர்பாக தியாகராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் தேவிபட்டினம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பாண்டி வழக்குபதிவு செய்து கதிரேசகுமாரை கைது செய்து சிறையில் அடைக்க அழைத்து சென்றார். அப்போது ராமநாதபுரத்தில் உள்ள கிளை சிறைச்சாலைக்கு அழைத்து சென்றபோது கதிரேசகுமார் போலீசாரிடம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறி அருகில் செல்வதுபோல் நடித்து நைசாக தப்பி ஓடிவிட்டார்.

இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி ராமநாதபுரத்தில் உள்ள ஊருணி பகுதியில் பதுங்கிஇருந்த கதிரேசகுமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே, கடந்த 2012–ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவருடைய தந்தை மனோகரனை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த வழக்கும், கத்தியை காட்டி மிரட்டியது உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் கதிரேசகுமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அளித்த பரிந்துரையை ஏற்று கலெக்டர் உத்தரவின்பேரில் கடந்த மாதம் அவர், குண்டர் சட்டத்தில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கடுங்காவல் தண்டனை

இந்தநிலையில் கோர்ட்டில் இருந்து அழைத்துச் சென்றபோது போலீஸ் காவலில் இருந்து தப்பி சென்றது தொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இன்பகார்த்திக் சிறைகாவலில் போலீசாரிடம் இருந்து தப்பிச் சென்ற வழக்கில் கதிரேசகுமாருக்கு 8 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை அளித்து உத்தரவிட்டார்.


Next Story