முற்றுகை போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுப்பு: தஞ்சையில் நியாயவிலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் தற்காலிக பணி நீக்கம் செய்த விற்பனையாளருக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தல்


முற்றுகை போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுப்பு: தஞ்சையில் நியாயவிலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் தற்காலிக பணி நீக்கம் செய்த விற்பனையாளருக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 Feb 2017 11:30 PM GMT (Updated: 2017-02-03T20:18:39+05:30)

தற்காலிக பணி நீக்கம் செய்த விற்பனையாளருக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி தஞ்சையில் முற்றுகை போராட்டம்

தஞ்சாவூர்,

அனுமதி மறுப்பு

தஞ்சை மருத்துவகல்லூரி சாலையில் உள்ள கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர். இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அனுமதியை மீறி போராட்டம் நடத்த போவதாக நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர். இதனால் இணைப்பதிவாளர் அலுவலகத்திற்குள் யாரும் நுழைந்துவிடாமல் இருக்கும் வகையில் 2 நுழைவு வாயில் கதவுகளையும் போலீசார் பூட்டியதுடன் இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகளையும் ஏற்படுத்தி இருந்தனர். மேலும் அலுவலகத்திற்குள்ளேயும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தலைமையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் கங்காதரன், தமிழ்நாடு அரசு அலுவலர் சங்க முன்னாள் பொதுச் செயலாளர் குமாரவேல் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் 30–க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு ஒன்று கூடினர். அவர்களை போலீசார் சந்தித்து அனுமதியை மீறி முற்றுகை போராட்டம் நடத்தினால் கைது செய்து சிறையில் அடைக்கப்படும் என்றும், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம்

இதனால் முற்றுகை போராட்டத்தை கைவிட்ட தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் பல்வேறு கோ‌ஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தெலுங்கன்குடிகாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவரின் அதிகார துஷ்பிரயோகத்தால் எவ்வித முகாந்திரமும் இன்றி, விதிமுறைகளை பின்பற்றப்படாமல் தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட விற்பனையாளர் ரவிக்கு மீண்டும் பணி வழங்க கோரியும், மாவட்ட கலெக்டர், மண்டல இணைப்பதிவாளர் ஆகியோரை கண்டித்தும், தெலுங்கன்குடிகாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவரை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

முடிவில் வட்ட தலைவர் வைத்திலிங்கம் நன்றி கூறினார்.


Next Story