ஓய்வூதியம் வழங்காததை கண்டித்து போக்குவரத்து கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் 3–வது நாளாக நடைபெற்றது


ஓய்வூதியம் வழங்காததை கண்டித்து போக்குவரத்து கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் 3–வது நாளாக நடைபெற்றது
x
தினத்தந்தி 3 Feb 2017 10:30 PM GMT (Updated: 2017-02-03T20:20:00+05:30)

ஓய்வூதியம் வழங்காததை கண்டித்து கும்பகோணத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சார்பில் போக்குவரத்து கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு 3–வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்பகோணம்,

ஓய்வூதியம்

தமிழக அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாததால் கும்பகோணத்தில் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 12–ந் தேதி ஓய்வூதியத்தில் 50 சதவீதமும், 19–ந் தேதி 50 சதவீதமும் என 2 தவணைகளாக ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இந்தநிலையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தடையின்றி ஓய்வூதியம் வழங்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் மற்றும் போக்குவரத்து துறை செயலாளர் ஆகியோர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் மீண்டும் போக்குவரத்துகழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தடையின்றி ஓய்வூதியம் வழங்க கோரி கும்பகோணத்தில் போக்குவரத்துகழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கம் சார்பில் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடைபெற்றது.

நேற்று 3–வது நாளாக போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் கும்பகோணம் போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி பாண்டியன், ராதாகிருஷ்ணன், ரவி, முத்துக்குமாரசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

பேச்சு வார்த்தை

ஆர்ப்பாட்டத்தில் ஒய்வூதியத்தை தமிழக அரசே ஏற்று வழங்க வேண்டும், மாதந்தோறும் 1–ந் தேதி தவறாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், நிலுவைத்தொகையை உடனே வழங்கவேண்டும்.

தமிழக அரசின் மற்ற துறைகளின் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்குவதுபோல் போக்குவரத்துக்கழக ஓய்வூதியதாரர்களுக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தவேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்தநிலையில் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் ரெங்கராஜன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அனைத்து ஓய்வு பெற்றோர் நலசங்கங்களின் கூட்டுக்குழு பொறுப்பாளர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது 6–ந் தேதி(திங்கட்கிழமை) ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதன்பேரில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.


Next Story