விழுப்புரம் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


விழுப்புரம் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 3 Feb 2017 10:45 PM GMT (Updated: 3 Feb 2017 5:25 PM GMT)

விழுப்புரம் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம்,

சக்தி விநாயகர் கோவில்

விழுப்புரம் பூந்தோட்டம் மேட்டுத்தெருவில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி காலை 8 மணிக்கு யாக சாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு ஹோமம், தத்துவார்ச்சனை, நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

அதன் பிறகு யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம் புறப்பட்டு சென்று 10.30 மணியளவில் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள தர்மசாஸ்தா அய்யப்பன், பாலமுருகன், ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சரஸ்வதி மற்றும் நவக்கிரகங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

சாமி வீதி உலா

அதன் பின்னர் பகல் 12 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, இரவில் சாமி திருவீதி உலா நடைபெற்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பூந்தோட்டம் மேட்டுத்தெரு பகுதி மக்கள் செய்திருந்தனர்.

Next Story