கிணற்றுக்குள் தவறி விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு வனத்தில் பாதுகாப்பாக விடப்பட்டது


கிணற்றுக்குள் தவறி விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு வனத்தில் பாதுகாப்பாக விடப்பட்டது
x
தினத்தந்தி 3 Feb 2017 8:45 PM GMT (Updated: 2017-02-04T00:16:46+05:30)

கோவில்பட்டி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்கப்பட்டது. சிறு காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த மான் வனத்தில் விடப்பட்டது.

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்கப்பட்டது. சிறு காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த மான் வனத்தில் விடப்பட்டது.

தண்ணீரைத் தேடி...

கோவில்பட்டி குருமலை வனப்பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள் வசித்து வருகின்றன. பருவமழை பொய்த்ததால், வனப்பகுதியில் உள்ள குளங்கள், குட்டைகள் தண்ணீரின்றி வறண்டன. இதனால் தண்ணீர் தேடி புள்ளிமான்கள் ஏராளமான புள்ளி மான்கள் விளைநிலங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் வருகின்றன.

கிணற்றில் விழுந்த மான்

நேற்று காலையில் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தலை அடுத்த ஆண்டிப்பட்டியில் மேகராஜ் (வயது 40) தோட்டத்தில் தண்ணீரைத் தேடி வந்த புள்ளிமான், அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தது. சுமார் 40 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 5 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்தது. இதனால் தண்ணீரில் தத்தளித்தவாறு புள்ளிமான் உயிருக்கு போராடியது.

உயிருடன் மீட்பு

இதனைப் பார்த்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி வீரலட்சுமணன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, கிணற்றில் இறங்கி புள்ளிமானை உயிருடன் மீட்டனர். பின்னர் அந்த புள்ளிமானை கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வனத்தில் விடப்பட்டது

கிணற்றில் தவறி விழுந்ததில் புள்ளிமானின் கழுத்து பகுதியில் சிறு காயங்கள் இருந்தன. எனவே கோவில்பட்டி கால்நடை ஆஸ்பத்திரியில் புள்ளிமானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாலை வரை கோவில்பட்டி வனத்துறை அலுவலகத்தில் தீவனம் கொடுத்து தங்க வைக்கப்பட்ட அந்த மான், குருமலை வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.

Next Story