காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு விமானத்தில் பறக்கும் 4 கோடி ஓசூர் ரோஜாக்கள் நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை


காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு விமானத்தில் பறக்கும் 4 கோடி ஓசூர் ரோஜாக்கள் நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை
x
தினத்தந்தி 3 Feb 2017 11:00 PM GMT (Updated: 2017-02-04T00:24:26+05:30)

காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு விமானத்தில் 4 கோடி ஓசூர் ரோஜாக்கள் கொண்டு செல்லப்படுகிறது.

ஓசூர்,

காதலர் தினம்

உலகம் முழுவதும் வாழும் காதலர்களால் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14–ந் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்தில், காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிசுப்பொருட்கள், வாழ்த்து அட்டைகள் போன்றவற்றை வழங்கி அன்பை பரிமாறிக் கொள்வது வழக்கம். இதில் ரோஜாப்பூக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரோஜாக்கள் உலக அளவில் புகழ் பெற்றவையாகும். ஓசூரில் உள்ள மண் வளம் மற்றும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக அதிக அளவில் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், பேரிகை, தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மட்டும் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜாக்கள் பயிரிடப்பட்டுள்ளன. திறந்த வெளியிலும், பசுமை குடில்கள் அமைத்தும் ரோஜாக்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த ரோஜா சாகுபடியில் சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகள் என மொத்தம் 2 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

இதில் தாஜ்மகால், ரெட்ரோஸ், நொப்ளஸ், பஸ்ட்ரெட், ஒயிட்ரோஸ் உள்பட 40–க்கும் மேற்பட்ட ரோஜா ரகங்கள் ஓசூர் பகுதியில் பயிரிடப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரில் சாகுபடி செய்யப்படும் ரோஜாக்கள் சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஓசூரில் இருந்து பெங்களூருவிற்கு கொண்டு செல்லப்படும் ரோஜாக்கள் அங்கிருந்து விமானம் மூலமாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இந்த ஆண்டு மழை குறைவாக இருந்த போதிலும் சீதோஷ்ண நிலை சீராக இருந்ததால் ரோஜாக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி உள்ளது. மேலும் பனிப்பொழிவும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாத நிலையில் காதலர் தினத்திற்காக ரோஜாக்களை அனுப்பும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு சுமார் 4 கோடி பூக்கள் ஏற்றுமதி செய்திட விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து ஓசூர் அருகே முகுலப்பள்ளியில் பசுமை குடில் அமைத்து ரோஜாக்கள் பயிரிட்டுள்ள விவசாயி ஸ்ரீதர் சவுத்ரி கூறியதாவது:–

அதிக பூக்கள்

புத்தாண்டு, கிறிஸ்துமஸ், காதலர் தினம் போன்ற நாட்களில் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஓசூர் ரோஜாக்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் காதலர் தினத்திற்கு அதிக அளவில் ரோஜாக்கள் அனுப்பப்படுகின்றன. மழை இல்லாவிட்டாலும் சீதோஷ்ண நிலை சீராக இருந்ததால் அதிக அளவில் பூக்கள் வந்துள்ளன. இந்த ஆண்டு சுமார் 10 லட்சம் பூக்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப உள்ளேன்.

சர்வதேச சந்தையில் ஓசூர் ரோஜாக்களுக்கு போட்டியாக சீனா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் இருந்தன. இருந்த போதிலும் ஓசூர் ரோஜாக்கள் தரமானதாக உள்ளதால் அவர்களால் ஈடு கொடுக்க இயலவில்லை. சீனா ரோஜாக்களின் தரம் குறைவே ஆகும். மேலும் ஆப்பிரிக்காவில் உற்பத்தி குறைவாகவே உள்ளது.

நல்ல விலை

இந்த ஆண்டு காதலர் தினத்திற்காக தாஜ்மகால் மற்றும் சிவப்பு ரோஜாக்கள் அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதே போல ஸ்பிரே, தாரா, பஸ்ட் ரெட், எல்லோ, பேஷிநேசன், சேடோ, தாளியா, ஓசன்பேன்ட், நோவியா ரக பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. ஒரு பூவுக்கு வெளிநாடுகளில் ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.20 வரை கிடைக்கிறது. ஒரு கட்டு பூக்கள் ரூ.200 வரை விற்பனையாகிறது.

தற்போது முதலே ரோஜாக்களை செடியில் இருந்து பறித்து, அதன் மொட்டுகள் விரியாமல் இருப்பதற்காக காற்று புகும் உறைகள் போட்டு குளிர்சாதன அறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் அதன் உறைகள் அகற்றப்பட்டு, பூக்கள் தரம் வாரியாக பிரித்து வெட்டப்பட்டு, பேக்கிங் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும். இந்த ஆண்டு பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தகம் அதிகமாக இருக்கும்

இதே போல முகுலப்பள்ளியைச் சேர்ந்த மற்றொரு விவசாயி வெங்கடாசலம் கூறும் போது, கடந்த ஆண்டு காதலர் தினம் ஞாயிற்றுக்கிழமை வந்தது. இதனால் கடைகளில் சற்று கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இந்த ஆண்டு காதலர் தினம் செவ்வாய்க்கிழமை வருவதால் வர்த்தகம் அதிகமாக இருக்கும். மேலும் ரோஜாக்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று நம்புகிறோம் என தெரிவித்தார்.


Next Story