கும்பகோணத்தில் இருந்து பழனிக்கு தைப்பூச காவடி பாதயாத்திரை 700–க்கும் மேற்பட்டோர் சென்றனர்


கும்பகோணத்தில் இருந்து பழனிக்கு தைப்பூச காவடி பாதயாத்திரை 700–க்கும் மேற்பட்டோர் சென்றனர்
x
தினத்தந்தி 3 Feb 2017 11:00 PM GMT (Updated: 3 Feb 2017 7:03 PM GMT)

கும்பகோணத்தில் இருந்து பழனிக்கு 700–க்கும் மேற்பட்டோர் தைப்பூச காவடி எடுத்து பாதயாத்திரையாக சென்றனர்.

கும்பகோணம்,

தைப்பூச காவடி பாதயாத்திரை

கும்பகோணம் துக்காம்பாளையத்தெரு பருவதராஜகுல மக்கள் ஆண்டுதோறும் பழனிக்கு தைப்பூச விழாவையொட்டி காவடி எடுத்து செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான காவடி பாதயாத்திரை நேற்றுமுன்தினம் தொடங்கியது. அன்று காலை காவிரி ஆற்றில் காவடிகளுக்கு அபிஷேகம் பூஜை நடைபெற்றது. முக்கியவீதிகள் வழியாக சென்ற காவடி பாதயாத்திரை குழுவினர் அன்று இரவு காந்திப்பேட்டை பாலமுருகன் சன்னதியில் தங்கினர். நேற்று காலை பாலமுருகன் சன்னதியில் காவடிகளுக்கு பூஜை செய்து பாதயாத்திரையை மீண்டும் தொடஙகினர். அங்கிருந்து துக்காம்பாளையத்தெரு, புதுப்பேட்டை, யானையடி சரவணத்தோப்பு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு நேற்று மதியம் கும்பகோணம் ராமசாமி கோவிலை அடைந்தனர்.

அன்னதானம்

அங்கு காவடி பாதயாத்திரை குழுவினருக்கு கும்பகோணம் வர்த்தகர் சங்கம் மற்றும் தாலுகா நெல், அரிசி வியாபாரிகள் சங்கம் சார்பில் தலைவர் கே.எஸ்.சேகர் தலைமையில், வர்த்தகர் சங்க செயலாளர் பி.ரமேஷ், தாலுகா நெல் அரிசி வியாபாரிகள் சங்க செயலாளர் பி.குருநாதன் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டு, பாதயாத்திரை குழுவினர் மற்றும் பக்தர்கள் சுமார் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காவடி பாதயாத்திரை குழுவினர் கும்பகோணம் ராமசாமி கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று கும்பகோணம் பழைய பேட்டை முனீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர். இன்று(சனிக்கிழமை) கும்பகோணம் பழைய பேட்டையில் இருந்து பாதயாத்திரை குழுவினர் ஜெகநாதபெருமாள் கோவிலை அடைகிறார்கள். அங்கிருந்து மேலக்காவேரி, அலவந்திபுரம், கபிஸ்தலம், திருவையாறு, தில்லைஸ்தானம், கூத்தூர், பவனமங்கலம், கோவிலடி, திருச்சி வழியாக இந்த பாதயாத்திரை குழுவினர் வருகிற 16–ந்தேதி(வியாழக்கிழமை) இரவு பழனியை சென்று அடைகிறார்கள். 700–க்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்பகோணத்தில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர்.


Next Story