பைப் வெடிகுண்டு வழக்கில் கைதான சையது ஒசாமா வீட்டில் புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை


பைப் வெடிகுண்டு வழக்கில் கைதான சையது ஒசாமா வீட்டில் புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை
x
தினத்தந்தி 3 Feb 2017 10:30 PM GMT (Updated: 2017-02-04T00:40:02+05:30)

மதுரையில் பைப் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான கம்பத்தை சேர்ந்த சையது ஒசாமா வீட்டில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

தேனி,

மதுரையில் பைப் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான கம்பத்தை சேர்ந்த சையது ஒசாமா வீட்டில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். மேலும் அவருடைய வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட புத்தகங்கள், சி.டி.க்களை பறிமுதல் செய்துள்ளனர்.

பைப் வெடிகுண்டு

மதுரை புதூர் காந்திபுரத்தை சேர்ந்தவர் அப்துல்ரகுமான் என்ற பாண்டி. இவர் அந்த பகுதியில் தையல் கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் இருந்து பைப் வெடிகுண்டுகளை கடந்த மாதம் 26–ந்தேதி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் புலன் விசாரணை செய்தனர். இதில், இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக அப்துல்ரகுமான், புதூர் விஸ்வநாதநகரை சேர்ந்த அப்துல்லா, சோலையழகுபுரத்தை சேர்ந்த காதர் செரீப், தேனி மாவட்டம் கம்பம் சுங்கம் தெருவை சேர்ந்த சையது ஒசாமா ஆகிய 4 பேரை கடந்த 27–ந்தேதி போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக சிலரையும் சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கம்பத்தில் சோதனை

கைது செய்யப்பட்ட சையது ஒசாமாவின் வீட்டில் சோதனை செய்வதற்காக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் மதுரையில் இருந்து கம்பத்திற்கு வந்தனர். பின்னர் கம்பம் சுங்கம் தெருவில் உள்ள சையது ஒசாமா வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது சையது ஒசாமா மற்றும் அப்துல்லா ஆகிய 2 பேரையும் போலீசார் அழைத்து வந்தனர். நீண்டநேரம் சோதனை நடத்திய பின்பு இருவரையும் பாதுகாப்புடன் மீண்டும் மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சோதனையின் போது, சையது ஒசாமா வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட புத்தகங்கள் மற்றும் பல்வேறு சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரர் ஒருவர் தெரிவித்தார். இந்த சதி திட்டங்களுக்கு கம்பத்தில் மேலும் சிலர் உதவி இருக்கலாம் என்று சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்து உள்ளது. அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கம்பம், உத்தமபாளையத்தில் தீவிரவாதிகள் ஊடுருவலா?

பைப் வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கம்பத்திலும் சோதனை நடத்தினர். சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நடத்தி வரும் விசாரணையில், கேரள மாநிலத்தில் இருந்து தீவிரவாதிகள் சிலர் தேனி மாவட்டம் கம்பம், உத்தமபாளையம் பகுதிகளில் ஊடுருவி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இந்த தகவலை போலீசாரால் இன்னும் உறுதி செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், கம்பம், உத்தமபாளையம் பகுதிகளில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். மத்திய உளவுத்துறையும் இதுதொடர்பாக கண்காணித்து வருகின்றனர். சந்தேகப்படும் படியான குடியிருப்புகளுக்கு செல்லும் வழித்தடங்களில் ஏதேனும் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தால் அவற்றில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்யவும் போலீசார் திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. அதேபோன்று கொடைக்கானல் மலையடிவார பகுதியில் அமைந்துள்ள தேவதானப்பட்டியிலும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.


Next Story