நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 3 Feb 2017 10:15 PM GMT (Updated: 2017-02-04T00:40:02+05:30)

ஆண்டிப்பட்டி அருகே, 100 நாட்கள் வேலை, நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

100 நாள் வேலை...

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், சண்முகசுந்தரபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அப்பகுதியை சேர்ந்த 400–க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு சரிவர சம்பளம் கொடுப்பதில்லை, திட்டத்தின்படி 100 நாட்கள் வேலை வழங்கப்படுவதில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

மேலும் இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும் பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சுற்றுவட்டார கிராமங்களான கரிசலபட்டி, ஆசாரிபட்டி, முத்துசங்கிலிபட்டி, ரோசனபட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு மட்டும் முறையாக வேலை, சம்பளம் வழங்கப்படுவதாக சண்முகசுந்தரபுரம் பகுதி பொதுமக்களுக்கு தெரியவந்தது.

முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று சண்முகசுந்தரபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது 100 நாள் வேலை திட்டத்தில் தங்களுக்கு முறையாக வேலை வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள சம்பள தொகையை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஊராட்சி மன்ற அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிலுவை சம்பள தொகையை வழங்கவும், திட்டத்தின்படி 100 நாட்கள் வேலை வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story