பண்ட்வால் அருகே 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; அர்ச்சகர் பலி


பண்ட்வால் அருகே 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; அர்ச்சகர் பலி
x
தினத்தந்தி 3 Feb 2017 7:46 PM GMT (Updated: 3 Feb 2017 7:45 PM GMT)

பண்ட்வால் அருகே 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அர்ச்சகர் பலியானார்.

மங்களூரு,

பண்ட்வால் அருகே 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அர்ச்சகர் பலியானார்.

40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது


தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா விட்டல் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் பட் (வயது 38). இவர் அந்தப்பகுதியில் உள்ள அனந்தேஸ்வரா கோவிலில் தலைமை அர்ச்சகராக பணியாற்றி வந்தார். மேலும் அவர் ஜோதிடராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் கார்த்திக் பட் நேற்று முன்தினம் தனது தந்தை விஜய் பட், தாய் தீபா பட் மற்றும் குழந்தைகள் அதர்வா, அத்யா ஆகியோருடன் மங்களூரு அருகே கட்டீல் பகுதியில் உள்ள துர்கா பரமேஸ்வரி கோவிலுக்கு தரிசனத்துக்கு சென்றார். பின்னர் அவர்கள் காரில் திரும்பி விட்டல் நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை கார்த்திக் பட் ஓட்டினார்.

அப்போது அவர்கள் பண்ட்வால் அருகே வைத்தியநாதா கோவில் பகுதியில் வந்தபோது, கார்த்திக் பட்டின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த 40 அடி பள்ளத்தில் பல்டி அடித்து கவிழ்ந்து விழுந்தது.

அர்ச்சகர் பலி

இதில், கார் அப்பளம்போல நொறுங்கியது. இந்த விபத்தில் காரின் இடிபாடுகளிடையே சிக்கி கார்த்திக் பட் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 4 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் விரைந்து வந்து, உயிருக்கு போராடிய 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மங்களூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பண்ட்வால் டவுன் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரய்யா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் பலியான கார்த்திக் பட்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ட்வால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பண்ட்வால் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story