குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை


குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 3 Feb 2017 9:30 PM GMT (Updated: 2017-02-04T02:14:35+05:30)

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிறுமிக்கு திருமண ஏற்பாடு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரத்தை சேர்ந்த சின்னத்தம்பி மகன் செல்வம் (வயது 25). இவர், கடந்த 2 வருடமாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் செங்குந்தபுரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுமிக்கும், செல்வத்திற்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. இந்த நிலையில் நேற்று காலை செங்குந்தபுரம் பகுதியில் வைத்து செல்வத்திற்கும், அச்சிறுமிக்கும் இடையே திருமணம் நடைபெற இருந்தது.

திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சைல்டு லைன் அமைப்பை சேர்ந்த சுகுணா, கிராம நிர்வாக அலுவலர் பொய்யாமொழி ஆகியோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வேலுசாமி சம்பவ இடத்திற்கு சென்று திருமணத்தை நிறுத்தி, மணப்பெண்ணை மீட்டனர். பின்னர் தனது மகளுக்கு 18 வயது முடியும் வரை திருமணம் செய்ய மாட்டோம் என அதிகாரிகளிடம் எழுதி கொடுத்தனர். இதையடுத்து அச்சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். சிறுமியின் திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story