பொதுக்கழிவறை தொட்டி இடிந்து விழுந்து 3 பேர் பலி மான்கூர்டில் பரிதாப சம்பவம்


பொதுக்கழிவறை தொட்டி இடிந்து விழுந்து 3 பேர் பலி மான்கூர்டில் பரிதாப சம்பவம்
x
தினத்தந்தி 3 Feb 2017 10:30 PM GMT (Updated: 2017-02-04T03:13:58+05:30)

மான்கூர்டில் பொதுக்கழிவறை தொட்டி இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மும்பை,

மான்கூர்டில் பொதுக்கழிவறை தொட்டி இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பொதுக்கழிவறை

மும்பை மான்கூர்டு, மன்டாலா பகுதியில் இந்திரா நகர் குடிசை பகுதியில் ஒரு ஓட்டல் எதிரே பொதுக்கழிவறை உள்ளது. இந்த பொதுக்கழிவறையை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் கழிவறை தொட்டியின் காங்கிரீட் மூடியில் விரிசல் ஏற்பட்டு இருந்ததாக தெரிகிறது. எனினும் அந்த பகுதி மக்கள் வேறு வழியில்லாமல் அந்த கழிவறையை பயன்படுத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை 8 மணியளவில் கழிவறையில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பொதுமக்கள் கழிவறைக்கு செல்ல நீண்ட வரிசையில் காத்து நின்றுகொண்டிருந்தனர்.

3 பேர் பலி

அப்போது திடீரென கழிவறையின் தொட்டி இடிந்து விழுந்தது. இதில், அங்கு நின்று கொண்டு இருந்த சிலர் இடிபாடுகளுடன் கழிவறை தொட்டிக்குள் விழுந்து புதைந்தனர். உடனடியாக அப்பகுதியில் நின்றவர்கள் தொட்டிக்குள் விழுந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். எனினும் மீட்கப்பட்டவர்களில் ஹரிஷ் பபின்(வயது40), கணேஷ்(40), முகமது சபீர்(30) ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து போலீசார், தீயணைப்புபடை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் மீட்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக ராஜவாடி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பொதுமக்கள் போராட்டம்

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கழிவறை தொட்டியில் இருந்து வாயு வெளியேற முடியாததால் அது இடிந்து விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கழிவறையை முறையாக பராமரிக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், “இந்த பகுதியில் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். ஆனால் அங்கு ஒரே ஒரு பொதுக்கழிவறை மட்டுமே உள்ளது. எனவே இந்த கழிவறையின் முன் எப்போதும் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பார்கள். கழிவறை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. மாநகராட்சியில் புகார் அளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. அதிகாரிகளின் அலட்சியமே விபத்திற்கு காரணம்” என்றார்.

Next Story