மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வசதியாக கடல் முகத்துவாரத்தில் மணல் தூர்வார மாற்று நடவடிக்கை நாராயணசாமி உறுதி


மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வசதியாக கடல் முகத்துவாரத்தில் மணல் தூர்வார மாற்று நடவடிக்கை நாராயணசாமி உறுதி
x
தினத்தந்தி 3 Feb 2017 10:30 PM GMT (Updated: 2017-02-04T04:02:25+05:30)

தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வசதியாக முகத்துவாரத்தில் மணல் தூர்வார மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்–அமைச்சர் கூறினார்.

புதுச்சேரி,

தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வசதியாக முகத்துவாரத்தில் மணல் தூர்வார மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மீன்பிடி துறைமுகம்

புதுவை தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் செல்ல முகத்துவாரம் தூர்வாரப்படாமல் இருந்ததால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். இந்தநிலையில் துறைமுகத்துவாரத்தை தூர்வார திட்டமிடப்பட்டது. கவர்னர் ஆலோசனைப்படி அந்த தூர்வாரும் பணி மத்திய அரசின் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

இந்த தூர்வாரும் பணிக்காக அதிக பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் பணம் வீணடிக்கப்படுவதாகவும் அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினார். கவர்னரின் செயல்பாட்டினால் உரிய காலத்தில் தூர்வாராமல் போனதால் மீனவர்களுக்கு ரூ.25 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கந்தசாமி வெளிப்படையாக கவர்னர் மீது குற்றஞ்சாட்டினார்.

நாராயணசாமி ஆலோசனை

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசின் நிறுவனம் சார்பில் தூர்வாரும் பணி தொடங்கியது. ஆனால் இந்த தூர்வாரும் பணி சரிவர நடைபெறவில்லை என்று மீனவர்கள் குற்றஞ்சாட்டினார்கள். நேற்று முன்தினம் அவர்கள் சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் தூர்வாரும் பணி தொடர்பாக முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், தலைமை செயலாளர் மனோஜ் பரிதா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கவர்னர் உத்தரவு

அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, அன்பழகன், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் முன்னலையில் புதுச்சேரி விசைப்படகு உரிமையாளர்கள் வந்து என்னை சந்தித்து பேசினர். ஏற்கனவே புதுவை தேங்காய்திட்டு துறைமுக முகத்துவாரத்தில் உள்ள மணலை தூர்வாரி படகுகள் கடலுக்குள் செல்வதற்கு ஏதுவாக வேலை செய்ய புதுவை மாநில அரசு சார்பில் ரூ.14 கோடிக்கு டெண்டர் விட ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது.

இதற்கு இடையில் அந்த பணியை மத்திய அரசு நிறுவனமான டிரஜ்ஜிங் கார்ப்பரேசனுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வந்த போது கவர்னர் உத்தரவின் பேரில் அந்த பணி அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அவர்கள் உரிய காலத்தில் தங்கள் வேலையை செய்யாமல் காலம் கடத்தியால் நான் டிரஜ்ஜிங் கார்பரேசன் தலைவரிடம் 2 முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உடனடியாக வேலையை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதன் பின்னர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நானும், அமைச்சரும், எம்.எல்.ஏ.க்களும் சேர்ந்து அந்த பணியை தொடங்கி வைத்தோம்.

நிவாரணம்

ஆனால் அந்த மணல் வாரும் எந்திரத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாக முகத்துவாரத்தில் தேங்கியுள்ள மணலை அவர்களால் வார முடியவில்லை. இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. எனவே மீனவர்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். நானும், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு விசைப்படகு உரிமையாளர்களை சந்தித்து பேசினோம்.

அப்போது அவர்கள் இது தொடர்பாக எங்களிடம் கோரிக்கை வைக்கும் போது, தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. காலத்தோடு அந்த மணலை வாரி முகத்துவாரத்தை திறந்து விட்டிருந்தால் நாங்கள் எங்கள் தொழிலை செய்திருப்போம். முத்துவாரம் தூர்வாராமல் இருப்பதற்கு யார் பொறுப்பேற்பது? என்று கேட்டனர்.

மாற்று எந்திரம்

முகத்துவாரத்தில் தேங்கி உள்ள மண்ணை அப்புறப்படுத்தி படகுகள் செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், மணல் வாரும் எந்திரம் சரியாக வேலை செய்யவில்லை என்றால் உடனடியாக மாற்று எந்திரம் மூலம் நடவடிக்கை எடுத்து இன்னும் 10 நாட்களுக்குள் மண்ணை அப்புறப்படுத்தி துறைமுகத்தை திறந்து விட வேண்டும் என்று டிரஜிங் கார்ப்பரேசன் தலைவரிடம் கூறினேன். அவரும் அவ்வாறு செய்வதாக எனக்கு வாக்குறுதி அளித்துள்ளார். ஆகவே விரைவில் அதற்காக நடவடிக்கை எடுக்கப்படும்.

மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். புதுவையில் டிரஜிங் எந்திரம் ஒன்று உள்ளது. அது பழுதாகி உள்ளது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புதுவை மாநிலத்திற்கு சொந்தமாக டிரஜ்ஜிங் எந்திரம் வாங்க ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரிக்கு நிதி

புதுவை மாநில பட்ஜெட் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ளது. உள்துறை அமைச்சகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கும். அதில் இருந்து புதுவைக்கும், டெல்லிக்கும் நிதி ஒதுக்கப்படும். இதுதான் பாரம்பரியமாக நடந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் மத்திய அரசு அனைத்து மாநிலங்களும் நிதியை நேரடியாக கொடுக்கும். புதுவை மாநில (2017–18) பட்ஜெட் தொடர்பாக நிதித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் நிதித்துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளனர். அதற்கான திட்ட வரைவை கொடுத்துள்ளனர்.

உள்துறை அமைச்கத்திற்கு மத்திய அரசு நிதியை ஒதுக்கியுள்ளது. இனிமேல்தான் நம் மாநிலத்திற்கு உள்துறை அமைச்கம் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கும். எனவே இதை புரிந்து கொள்ளாமல் புதுவை மாநிலத்திற்கு தனியாக மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று மற்றவர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. புதுவை மாநிலத்தில் வெள்ளம், வறட்சி ஏற்பட்டால் இதற்காக நிவாரணம் மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் தான் வரும்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.


Next Story