26. கனவுகளில் விளைந்தவை


26. கனவுகளில் விளைந்தவை
x
தினத்தந்தி 4 Feb 2017 8:29 AM GMT (Updated: 2017-02-04T13:59:05+05:30)

‘கனவுகள் ஏன் வருகின்றன, எதற்காக வருகின்றன?’ எனும் ஆய்வுகள் ஒரு பக்கம் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

‘கனவுகள் ஏன் வருகின்றன, எதற்காக வருகின்றன?’ எனும் ஆய்வுகள் ஒரு பக்கம் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. ‘கனவு காணுங்கள்’ என லட்சியத்தைக் குறித்து அப்துல் கலாம் சொன்னார். ‘பகல் கனவு காணாதீங்க’ என பெரியவர்கள் அடிக்கடி சொல்கின்றனர்.

எது எப்படியோ, இந்தக் கனவுகள் பல்வேறு வியப்பூட்டும் வி‌ஷயங்களின் முதல் சுவடாய் இருந்திருக்கிறது என்பது பிரமிப்புச் செய்தி. பல கண்டுபிடிப்புகள், பல படைப்புகள் இவையெல்லாம் கனவுகளிலிருந்து கிடைத்திருக்கின்றன. அவற்றில் ஒரு பத்து வி‌ஷயங்கள் இந்த வாரம்.

பீரியாடிக் டேபிள் : ‘தனிம அட்டவணை’ என தமிழில் அழைக்கப்படும் உலகப் புகழ் பெற்ற ‘பீரியாடிக் டேபிள்’ பற்றி தெரியாத பள்ளிக்கூட குழந்தைகள் இருக்க முடியாது. டிமிட்ரி மென்டலீவ் என்பவர் தான், இதைக் கண்டுபிடித்தவர். வேதியியலில் அதீத ஆர்வம் கொண்ட அவருக்கு அறிவியல் ரீதியாக ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு பார்முலா கண்டுபிடிக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால் முடியவில்லை.

ஒரு நாள் ஒரு கனவு. கனவில் ஒரு அட்டவணை, அந்த அட்டவணையில் தேவையான எண்கள் எல்லாம் வந்து நிரம்பிக் கொள்கின்றன. அதை வைத்து என்ன மதிப்பு வேண்டுமானாலும் கண்டு பிடிக்க முடிகிறது. திடீரென முழிப்பு வருகிறது. சற்றும் தாமதிக்காமல் அருகில் கிடந்த பேப்பரில் கனவை அப்படியே கிறுக்கி வைக்கிறார். சந்தோ‌ஷம் தாங்க முடியவில்லை. பின்னர் முதல் வேலையாக தனது கனவு கான்செப்டை அப்படியே முழுமைப்படுத்துகிறார். ‘பீரியாடிக் டேபிள்’ ரெடி. 1869–ம் ஆண்டு அந்த தனிம அட்டவணையை வெளியிட்டார். கனவு, அவருடைய கனவை நனவாக்கிக் கொடுத்தது!

ஒரு உலகப் புகழ் பாடல் : ஒரு இசைக்கலைஞர் தூங்கிக் கொண்டிருந்தார். நாடி நரம்பு, ரத்தம், சதை எல்லாத்திலும் இசை வெறி ஊறிப்போன அவருக்கு கனவில் ஒரு பாடல் ஒலிக்கிறது. அற்புதமான பாடல். காலையில் எழும்பும் போது அந்தப் பாடலை பாடியபடியே எழும்புகிறார். அது கனவில் கிடைத்த பாடல் என அவருக்கு புரியவில்லை. எங்கேயோ கேட்ட பாடல், கனவில் ஒலித்தது என நினைக்கிறார்.

அந்தப் பாடலை அப்படியே எழுதி டியூன் போடுகிறார். ‘அந்தப் பாட்டை எங்கே கேட்டேன்?’ என மூளையைக் கசக்குகிறார். கண்டுபிடிக்க முடியவில்லை. நண்பர்கள் அனைவரிடமும் கேட்கிறார். யாரும் அந்தப் பாட்டைக் கேட்டதில்லை என்கிறார்கள். பழைய இசை ஆல்பங்களை எல்லாம் புரட்டுகிறார். இசை தெரிந்த அனைவரிடமும் கேட்கிறார். யாருக்கும் தெரியவில்லை. பின்பு தான் அது கனவில் கிடைத்த பாடல் என புரிகிறது. அந்தப் பாடலை அவர்கள் வெளியிடுகின்றனர். அது உலகப் புகழ் பெற்ற பாடலாய் மாறி விடுகிறது.

அந்தப் பாடலைக் கனவில் கண்டவர், பால் மெக்கார்த்தி. பாடல்– ‘எஸ்டர்டே...’ என்று தொடங்கும் பாடல். இசைக்குழு, உலகப் புகழ் பெற்ற பீட்டில்ஸ்!.

டெர்மினேட்டர் : 102 டிகிரி காய்ச்சலில் சுருண்டு படுத்திருந்தார் ஜேம்ஸ் கேமரூன். ரோம் நகரில் தனது படம் ஒன்றின் இறுதி கட்ட வேலைகளுக்காக அங்கே வந்திருந்தார். தெரியாத ஊரில் வந்து இப்படி காய்ச்சலில் மாட்டிக் கொண்டோமே என கலக்கத்துடன் படுத்திருந்தவர், தூங்கிப் போனார்.

திடீரென ஒரு கனவு. கனவில் ரோபோ ஒன்று சமையலறைக் கத்தியை வைத்துக் கொண்டு நெருப்புப் பிழம்பிலிருந்து தப்பிக்க முயல்கிறது. ரோபோ கொலையாளியின் செயல்கள் கனவில் விரிய விழித்துக் கொண்டார் கேமரூன். அந்தக் கனவு அவரை வசீகரித்தது.

தனது கனவை எழுதினார். அதற்கு கை, கால், கண், காது, மூக்கு எல்லாம் வைத்தார். உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ‘டெர்மினேட்டர்’ கதை ரெடி. அந்த ஒரு கனவு ஜேம்ஸ் கேமரூனுக்குக் கொடுத்த செல்வமும், புகழும் எவ்வளவு என்பது உலகறிந்த கதை!

டுவைலைட்  : நியூயார்க்கின் ‘பெஸ்ட் செல்லர்’ லிஸ்டில் சுமார் 2 ஆண்டுகள் இருந்த ஒரு நாவல். உலகில் சுமார் 1.7 கோடி பிரதிகள் விற்ற நாவல். அந்தக் கதை பின்னர் திரைப்படமாகி உலகெங்கும் பல பில்லியன் டாலர்களைச் சம்பாதிக்கவும் செய்தது! இத்தனைக்கும் காரணமான அந்த நாவலின் கரு கனவிலிருந்து கிடைத்தது என்பது வியப்புக்குரியது.

ஸ்டெபனி மேயர் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது ஒரு கனவு வந்தது. வித்தியாசமான காதல் கனவு. கூடவே காதலர்கள் உரையாடவும் செய்கிறார்கள். அந்த மையம் தான் அவரை வசீகரித்தது. அந்தப் புள்ளியைச் சுற்றி அவர் வரைந்த கோலமே ‘டுவைலைட்’ நாவல்.

அந்த முதல் நாவலுக்குக் கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்த பாகங்களை உருவாக்கியது. இன்றும் இளசுகளின் மனம் கவர்ந்த நாவல்களின் பட்டியலில் அதற்கு ஒரு இடம் உண்டு.

ஸீகல் : ஆங்கில நாவல் களோடு பரிச்சயம் உள்ளவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கக் கூடிய பெயர் ‘ஸீகல்’. ‘ஜோனதன் லிவிங்க்ஸ்டன் சீகல்–எ ஸ்டோரி’ எனும் பெயரில் அந்த நாவல் வெளியானது. உலகிலேயே அதிக விற்பனையான நாவல் எனும் பெயரையும் பெற்றது. அதற்கு முன் சாதனை நாவலாக இருந்த ‘கான் வித் வின்ட்’ நாவலின் விற்பனையை இது முறியடித்தது.

உளவியல் கலந்த இந்த நாவலின் தலைப்பு, எழுத்தாளர் ரிச்சர்ட் பெக் கின் காதுகளில் ஏதோ ஒரு ரீங்காரமாய் விழுந்தது. உடனே நாவலை எழுத ஆரம்பித்தார். அதன்பின் கொஞ்ச காலம் நாவலை கிடப்பில் போட்டார். திடீரென ஒரு கனவு. அந்தக் கனவில் அந்த நாவலுக்கான முடிச்சும், தொடர்ச்சியும் அவருக்குக் கிடைக்க, சட்டு புட்டு என எழுதி முடித்தார். நாவல் உலகப் புகழ் பெற்றது. ஒரு கனவு, அவரது கனவு நாவலை முடிக்க உதவியது.

கூகிள் : லேரி பேஜ் படிப்பில் ரொம்ப சுமார். எப்போது வேண்டுமானாலும் கல்லூரியில் இருந்து வெளியேற்றி விடுவார்கள் எனும் பயமும், குழப்பமும் அவரது மனதை அழுத்திக் கொண்டே இருந்தது. அந்த அழுத்தமான சூழலில் ஒரு நாள் ஒரு கனவு கண்டார். அதில் அவர் இன்டர்நெட்டையே முழுமையாய் ஒவ்வொரு கணினியிலும் தரவிறக்கம் செய்து வைக்கிறார். அந்தக் கனவு அவரை தூங்க விடவில்லை. ‘அது சாத்தியமா?’ என யோசித்தார். எழும்பி உட்கார்ந்து வி‌ஷயங்களைக் கூட்டிக் கழித்துப் பார்த்தார். முழுமையாய் தரவிறக்கம் செய்ய முடியாது. ஆனால் ‘லிங்கு’களில் தகவலை சேமிக்கலாம் என புரிந்து கொண்டார். அந்தக் கனவின் விளைவே ‘கூகிள்’. இப்போ எதுக்கெடுத்தாலும் கூகிளில் தேடுகிறோமே, அந்த கனவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

இன்ஸெப்சன் : கிறிஸ்டோபர் நோலனின் புகழ்பெற்ற திரைப்படம் ‘இன்ஸெப்‌ஷன்’. அந்தப் படம் கனவுகளுக்குள் கனவுகள் காண்பதைப் பற்றியது. கனவுகளை செயற்கையாய் உருவாக்குவதைப் பற்றியது. கனவு எது?, நிஜம் எது? என்பது தெரியாமல் மக்கள் உலவும் படம் இது. இந்தப் படத்தின் இன்ஸ்பரே‌ஷனை கிறிஸ்டோபர் நோலன் பெற்றுக் கொண்டதும் கனவுகளிலிருந்து என்பதே ஆச்சரியமான வி‌ஷயம்.

இது அவருடைய ஒரு கனவிலிருந்து வந்ததல்ல. பல கனவுகளின் தொகுப்பாக வந்தது. கனவுக்கும், நிஜத்துக்கும் இடையேயான வேறுபாட்டைக் கண்டுபிடிப்பது என்பதை வைத்து கதையை நெய்தார் கிறிஸ்டோபர் நோலன். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைந்து நோலனுக்கு உலகப் புகழ் வாங்கித் தந்தது.

டின் டின் இன் திபெத் : கார்டூனிஸ்ட் ஹெர்ஜ் ‘டின் டின்’ மூலம் உலகப் புகழ் பெற்றவர். இவருடைய கதை பல்வேறு திரைப்படங்களாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகவும், ரேடியோ நிகழ்ச்சிகளாகவும் பல வடிவம் பெற்றவை. அவற்றில் மிகப் பெரிய புகழ் பெற்றது அவருடைய 20–வது பாகமான ‘டின் டின் இன் திபெத்’ கதை.

டின் டின் நினைவுகள் அவரை சுழற்றியடித்துக் கொண்டிருந்த காலத்தில் அவர் ஒரு கனவு கண்டார். அது தான் ‘டின் டின் இன் திபெத்’ கதை. அவருடைய டாக்டர்கள் எல்லாம், ‘ஓவரா டின் டின் பற்றி யோசிக்காதீங்க’, ‘அதை மறக்காவிட்டால் உங்களுக்கு சிக்கல்’ என்றார்கள். ஜெர்ஜ் கவலைப்படவில்லை. தனது கனவை அப்படியே கார்ட்டூனாக்கினார். அவரது ‘டின் டின் இன் திபெத்’ தயாரானது, உலகப் புகழ் பெற்றது.

சார்பியல் கோட்பாடு : ஐன்ஸ்டீனின் மிகப்பெரிய பார்முலாக்களில் ஒன்று ‘ரிலேட்டிவிட்டி தியரி’. அதாவது சார்பியல் கோட்பாடு. ஒரு நாள் அவருக்கு ஒரு கனவு வந்தது. மின்சாரம் பாய்ச்சப்பட்டிருக்கும் ஒரு வேலியில் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அப்போது அதில் மின்சாரம் இல்லை. விவசாயி வந்து பேட்டரியை மாற்றுகிறார். அப்போது மின்சாரம் பாய்கிறது மாடுகளெல்லாம் ஒரே நேரத்தில் தூக்கி வீசப்படுகின்றன.

அப்போது ஐன்ஸ்டீன் விவசாயியிடம் கேட்கிறார், ‘எப்படி எல்லா மாடுகளும் ஒரே நேரத்தில் தெறித்து விழுகின்றன?’ என்று.

அவரோ, ‘இல்லையே ஒன்றன் பின் ஒன்றாகத் தானே விழுந்தன’ என்கிறார்.

ஐன்ஸ்டீன் திடுக்கிட்டு விழிக்கிறார்.

அந்தக் கனவு அவரை புதுமையான கோணத்தில் சிந்திக்க வைக்கிறது. ‘ஒரே வி‌ஷயத்தை ஒருவர் சட்டென நிகழ்வதாகவும், இன்னொருவர் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்வதாகவும் பார்க்க முடியுமா?’ என யோசிக்கிறார். சார்பியல் கோட்பாடு பிறக்கிறது!

தையல் மெஷின் : தையல் என்பது மிகப்பெரிய பிரம்ம பிரயத்தனமாய் இருந்த காலகட்டம் அது. ஊசியில் நூல் எங்கே கோர்ப்பது என்பதெல்லாம் அப்போது கண்டுபிடிக்கப்படவில்லை. 1845–ம் ஆண்டு எலிஸ் ஹோவ் ஒரு கனவு கண்டார். அதில் அரசர், ஹோவுக்கு ஒரு நிபந்தனை விதிக்கிறார். 24 மணி நேரத்தில் இதற்கு ஒரு முடிவு எட்டப்படாவிட்டால் மரண தண்டனை. பதறிப்போன ஹோவ் கடுமையாக உழைக்கிறார். முடிவு கிடைக்கவில்லை. அவரை கொலைக்களத்துக்கு கொண்டு செல்கிறார்கள். அப்போது தான் அவர் கவனித்தார். வாளின் தலையில் ஓட்டை போட்டு கைப்பிடி அமைத்திருந்த முறை. ‘பளிச்’ என ஒரு மின்னல். ஊசிக்கு நூலை எங்கே கோக்கலாம் என ஐடியா கிடைத்தது. ‘ஐயா! எனக்கு ஒரு கடைசி சான்ஸ் கொடுங்கள்’ என கெஞ்சுகிறார். எல்லாம் கனவில் தான். திடுக்கிட்டு விழிக்கிறார். விடியற்காலை 4 மணி. ஆய்வு கூடம் ஓடிய அவர், தனது கனவை நனவாக்குகிறார். நவீன தையல் கலையின் அடிப்படை அங்கே நிறைவேறியது.

தையல் மெஷினை கண்டுபிடித்தது இவர் அல்ல. ஆனால் இன்றைய நுட்பத்தைக் கண்டுபிடித்தவர் இவர் தான். அதற்கான காப்புரிமையும் இவரிடமே இருக்கிறது.

(தொடரும்)


Next Story