1. செண்பகராமன்: ‘மாயப்போராளி’ – ‘ஜெய்ஹிந்த்’ செண்பகராமன்


1. செண்பகராமன்: ‘மாயப்போராளி’ – ‘ஜெய்ஹிந்த்’ செண்பகராமன்
x
தினத்தந்தி 4 Feb 2017 9:54 AM GMT (Updated: 2017-02-04T15:24:11+05:30)

பெயர் தெரிந்திருக்கும். அவருக்குப் பின்னால் இருக்கும் ரகசியங்கள் அவ்வளவாக வெளியில் வந்திருக்காது.

பெயர் தெரிந்திருக்கும். அவருக்குப் பின்னால் இருக்கும் ரகசியங்கள் அவ்வளவாக வெளியில் வந்திருக்காது. அத்தகைய ரகசியமான ரகசியங் களைச் சொல்வதே இந்தத்தொடர். நேதாஜி எனும் வீரத்தலைவனின் காதல் ஓவியமான எமிலி போஸ் பற்றி இதுவரை பார்த்தோம்.

ஏறத்தாழ அவரது சமகாலத்தில் வாழ்ந்த இன்னொரு விடுதலைப் போராளியைப் பற்றியும் அவரது காதல் மனைவியின் வைராக்கியம் குறித்தும் இனி படிக்கலாம்.

கடலுக்குள் இருந்து சென்னை மெரினா கடற்கரை பகுதியை நோக்கி சட சடவென குண்டுகள் வந்து விழுந்தன. ஆங்கிலேயருக்குச் சொந்தமான பர்மா ஷெல் பெட்ரோல் டேங்குகள் தீப்பிடித்தன. அந்த இரவில் கொளுந்து விட்டு எரிந்த நெருப்பு கங்குகளும் கரும்புகையும் மதராசப்பட்டினத்தையே கபளீகரம் செய்துவிடுவது போல எழுந்து நின்றன. நவராத்திரி கொலு பஜனைகளும் சுண்டல் விநியோகமும் முடிந்து அப்போதுதான் தூங்கப்போயிருந்த மயிலாப்பூரும், திருவல்லிக்கேணியும் அலறியடித்து எழுந்தன. கடற்கரை ஓரத்தில் இருந்த அவர்கள் மட்டுமா, மொத்த மெட்ராசுக்கும் தூக்கம் தொலைந்து போனது. ‘அய்யய்யோ... எம்டன் இங்கேயும் வந்து குண்டு போடுறான்..!’

சென்னை உயர்நீதிமன்ற சுற்றுச்சுவரின் பலமான ஒரு பகுதி குண்டுவீச்சால் நொறுங்கி விழுந்தது. ஆங்கிலேய அரசாங்கத்தின் ஆட்சிப்பீடமான செயின்ட் ஜார்ஜ் கோட்டையைப் பார்த்தும் குண்டு வீசப்பட்டது. அதற்குள் காசிமேட்டில் இருந்த ஆங்கிலேய கடற்படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். பத்தே நிமிடம் தான். மொத்தம் 130 குண்டுகளை வீசிவிட்டு நீரில் மூழ்கி மறைந்தான் ‘எம்டன்’.

3 பேர் உயிரிழந்தனர். 12 பேருக்கு காயம் ஏற்பட்டது. 13 லட்சம் லிட்டர் எண்ணெய் எரிந்து போனது. அவ்வளவுதான் எம்டனால் ஏற்பட்ட நேரடி இழப்பு. ஆனால் ‘எங்களை யாராலும் வெல்ல முடியாது’ என்று இறுமாந்திருந்த இங்கிலாந்து கடற்படையினரைப் பொடேரென தலையில் தட்டிவிட்டுப் போனதே எம்டனின் சாதனை. அதோடு ஆரம்பத்தில் ஆட்டுத்தோல் வியாபாரத்திற்காக வந்து ஆட்டம் போட்ட வெள்ளையரின் தென்னிந்திய தலைநகரை நிலை குலைய வைத்ததும் எம்டன் செய்த பெரிய வேலை.

முதல் உலகப்போர் தொடங்கியதில் இருந்தே மெட்ராஸ் மக்களிடம் ஒருவித பீதி நிலவியது. அதிலும் ஜெர்மனியின் போர்க்கப்பலான ‘எம்டன்’, திடீர்,     திடீரென தோன்றி எதிரி நாடுகளின் கப்பல்களை நடுக்கடலில் வைத்தே அழித்து வந்த செய்திகள் மிரள வைத்தன. ‘எந்த இடத்தில் எம்டன் தோன்றுவான்; எப்படி தாக்குவான்’ என்று தெரியாத நிலைமை.

1914–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சீன நாட்டு கடலில் எம்டன் ஆடிய தாண்டவம் பற்றி அறிந்த சென்னை மக்களில் சிலர் ‘ஊரை விட்டு வெளியேறி விடுவது உத்தமம்’ என்று யோசித்துக்கொண்டிருந்த போதுதான் செப்டம்பர் 22–ந் தேதி செவ்வாய்க் கிழமை இரவு 9.30 மணிக்கு எம்டனின் குண்டுகள் சென்னையிலும் வந்து விழுந்தன.

இண்டு இடுக்கு விடாமல் எம்டன் பீதி நிரம்பியது. கொஞ்சத்திலும் கொஞ்சமாக உண்மையும் இஷ்டம் போல வதந்திகளும் பகிரப்பட்டன. கடலுக்கு அடியில் மூழ்கி இருக்கும் எம்டன் மீண்டும் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் என்பது அதில் முக்கியமானது.

‘யாரும் பீதி அடைய வேண்டாம்; ஆங்கிலேய கடற்படை எம்டனை விரட்டி அடித்துவிட்டது. பாதுகாப்புக்கான எல்லா ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்துள்ளது’ என்று சென்னையின் தெருவுக்குத் தெரு குழாய் ஒலிபெருக்கிகளை வைத்துக்கொண்டு கத்தினார்கள்.

அவர்களின் தொண்டை தண்ணீர் வற்றிப் போனதே மிச்சம். மக்கள் அதை நம்பத்தயாரில்லை. உயிர் பயத்திற்கு முன்பு வெள்ளையர் அரசின் சமாதானங்கள் எடுபடவில்லை. கடலோரத்தில் வசித்த மீனவர்கள் பட்டினத்தின் மேற்கு பகுதிக்குப் புறப்பட்டனர். நகரத்திற்குள் இருந்தவர்கள் மூட்டை, முடிச்சுகளுடன் சென்னையைவிட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி நடையைக் கட்டினார்கள்.

நாள்தோறும் சுமார் 25 ஆயிரம் பேர் சென்னையைவிட்டு வெளியேறினார்கள். வகை, தொகையின்றி மக்கள் குவிந்ததால் நகரத்தின் உள்ளூர் போக்கு வரத்துக்காக இருந்த டிராம் வண்டிகளின் சேவை நிறுத்தப்பட்டது. சென்னையிலிருந்து வெளியூர் சென்ற ரெயில்களில் எல்லாம் நிற்கக்கூட இடமில்லை. அரைக்கால் சட்டையும் சிவப்புத்தொப்பியும் போட்ட அன்றைய போலீஸ்காரர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

கடலுக்குள் மட்டுமே மாயவித்தைகளை காட்டி தங்கள் கப்பல்களைக் குறிவைத்து அழித்து வந்த எம்டன், முதன்முறையாக சென்னை நகரத்திற்குள் தாக்குதல் நடத்திய அதிர்வு இங்கிலாந்து வரை எதிரொலித்தது. ‘உடனே எம்டனை அழித்தாக வேண்டும்’ என்பதற்காக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷியா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த 72 போர்க்கப்பல் களை களத்தில் இறக்கினார்கள்.ஜெர்மனி கடற்படையினருடன் எம்டன் கப்பலில் வந்து சென்னையில் நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட செண்பகராமன் பிள்ளையின் தலைக்கு ஒரு லட்சம் பவுண்டு பரிசு அறிவித்தது ஆங்கிலேய அரசு. அன்றைய இந்திய மதிப்பில் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்.

அசகாயசூரத்தனம் செய்வோரையும் அடுத்தவரை மிரள வைப்போரையும் ‘எம்டன்’ என்று 100 ஆண்டுகள் கடந்த பின்னர் இப்போதும் சொல்கிறோம் என்றால் அதன் உளவியல் பாதிப்பு எப்படி இருந்திருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளலாம். தம்முடைய சொந்த மக்களின் உயிருக்குப் பாதிப்பு ஏற்படாமல் ஆங்கிலேயரை இப்படி அதிர வைத்த செண்பகராமன், வெள்ளை அரசாங்கத்தில் போலீஸ்காரராக இருந்தவரின் பிள்ளை.

அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த (இப்போதைய கன்னியாகுமரி மாவட்டம்) நாஞ்சில் நாட்டு தமிழ் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த சின்னச்சாமிக்கும் நாகம்மாளுக்கும் மூத்த மகனாக 1891–ம் ஆண்டு செப்டம்பர் 15  அன்று புத்தன்சந்தையில் பிறந்தவர் செண்பகராமன்.‘செண்பக்’, ‘வெங்கிட்டான்’ போன்ற செல்லப் பெயர்களும் அவருக்கு உண்டு. திருவனந்த புரம் காந்தாரி அம்மன் கோவில் தெருவிலிருந்த தொடக்கப் பள்ளியிலும் பிறகு மகாராஜா உயர்நிலைப்பள்ளியிலும் படித்தார். கான்ஸ்டபிளாக இருந்த சின்னச்சாமி பிள்ளை போலீஸ் ஏட்டு ஆக பதவி உயர்வு பெற்ற போது, மகன் செண்பகராமன் மனதில் இந்தியாவின் விடுதலை குறித்த எண்ணங்கள் கிருஷ்ணசாமி அய்யர் என்ற தேச பக்தரால் விதைக்கப்பட்டன. ஒரே தெருவில் வசித்து வந்த அவரது வீட்டில், கோபாலகிருஷ்ண கோகலே, பாலகங்காதர திலகர், ஜான்சி ராணி போன்றோரின் படங்கள் மாட்டப்பட்டிருக்கும்.

பள்ளிக்குப் போய் வரும் போது அந்தப் படங்களை எல்லாம் பார்த்துவிட்டு அவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுப்பார் செண்பகராமன். கிருஷ்ணசாமியும் விடுதலைக்கான போராட்டங்கள் பற்றி எடுத்துச்சொல்வார். விடுதலை வேட்கையும் வெள்ளையர் மீதான வெறுப்பும் செண்பகராமன் மனதில் ஆழமாக பதிந்து போனது.

ஒருநாள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தான் சிறுவன் செண்பகராமன். வீதி வழியாக ‘வந்தே மாதரம்’, ‘பாரத மாதாவுக்கு ஜே’ என்று முழங்கியபடி ஊர்வலம் போனது. பார்த்துக் கொண்டே இருந்த செண்பகராமனும் திடீரென உணர்ச்சிப் பெருக்கோடு முழக்கமிட்டான். கூடவே ‘ஆங்கிலேயர் ஒழிக’ என்பதையும் சேர்த்து கொண்டான்.

ஊர்வலத்தை நடத்திச் சென்றவர், ஓடோடி வந்து தன் கழுத்தில் இருந்த மாலையைக் கழற்றி செண்பகராமனுக்குப் போட்டார். ஊர்வலம் கடந்து போன பிறகு, அதே முழக்கங்களை எழுப்பியபடி வீட்டுக்குள் போன ‘செண்பக்’ ஐ அம்மா கவலையோடு பார்த்தார். ‘இப்படி எல்லாம் கோ‌ஷம் போடாதேப்பா... உன் அப்பாவின் வேலைக்கு ஆபத்து வரும். உன்னையும் ஜெயில்ல போட்டுருவாங்க.. வெள்ளக்காரங்க பொல்லாதவங்க’ என்று மகனுக்குப் புத்திமதி சொன்னார்.

அம்மாவின் அறிவுரை எல்லாம் கிருஷ்ணசாமி அய்யரைப் பார்க்கும் வரைதான் மனதில் நின்றது. நடந்ததை அறிந்த அவர், ‘சபாஷ்... உன்னைப் போலவே எல்லா மாணவர்களும் கோ‌ஷமிட்டால் தான் பாரத மாதாவின் விலங்கொடிக்க முடியும்’ என்றார்.

பள்ளிக்கூடப்பருவத்தில் பயமறியாத இளங்கன்றாக துள்ளிக் குதித்து ஓடி நண்பர்களைத் திரட்டினார் செண்பக். ஒரே மாதத்தில் அவரது தலைமையில் ‘பாரத மாதா வாலிபர் சங்கம்’ உதயமானது. அதே முழக்கங்களை எழுப்பி திருவனந்தபுரம் வீதிகளைச் சுற்றி வந்தார்கள்.

அதிரடியாக பள்ளிக்கூடத்திற்குள்ளும் ‘வந்தே மாதரம்’ முழங்க, கையில் தடியோடு வந்தார் தலைமையாசிரியர். மாணவர்களில் சிலர் ஓடிவிட செண்பக்கும் அவரது நெருங்கிய நண்பர்களும் அப்படியே நின்று கொண்டு, விடுதலைக்காக சேர்ந்து போராட வருமாறு தலைமையாசிரியரையே அழைத்தனர். கோபம் கொப்பளிக்க அவர் போலீசை வரவழைத்தார்.

பள்ளியில் வைத்து செண்பகராமனை அடி பின்னி எடுத்தார் ஏட்டு சின்னச்சாமி. வேறு யாருமல்ல; அவரது அப்பா தான். முழக்கமிட்ட மாணவர்களை ‘கோச்’ வண்டியில் ஏற்றி, திருவனந்தபுரத்திற்கு வெளியே கொண்டு போய் விட்டுவரவும் சின்னச்சாமி ஏற்பாடு செய்தார்.

இப்படியான களேபரங்களுக்கு இடையே பள்ளிப்படிப்பை முடித்த செண்பகராமன், அதே வளாகத்திலுள்ள மகாராஜா கல்லூரியில் சேர்ந்தார். விடுதலைப் போராட்டங்கள் பற்றி வந்த திலகரின் ‘கேசரி’ போன்ற பத்திரிகைகளைத் தொடர்ந்து படித்தார். அப்போதுதான் கேட்டவுடனே தேசப்பற்றை  ஊட்டும் ‘ஜெய்ஹிந்த்’ என்னும் ஒற்றை மந்திரச்சொல்லை உருவாக்கினார்.

சக மாணவர்கள், பேராசிரியர்கள், முதல்வர் என பார்ப்பவர்களிடம் எல்லாம் வணக்கத்திற்குப் பதிலான வார்த்தையாக அதனைப் பயன்படுத்தத் தொடங்கினார். இந்த புது சொல் கல்லூரிக்குள் உலா வரத்தொடங்கியதும் முதல்வருக்கு உதறல் எடுத்தது. கல்வித்துறைக்கும், போலீசுக்கும் தகவல் போனது. ஏற்கனவே காவல்துறையின்  பார்வை செண்பக       ராமன் மீது விழுந்திருந்த நேரத்தில் இந்தப் புகாரும் சேர்ந்து கொண்டது.

அதன்பிறகு அவர் வெளிநாட்டுக்குப் போய் அந்த நாட்டு மன்னரைக் கவர்ந்தது எப்படி?

எம்டன் கப்பலில் வந்து குண்டு போட்டது ஏன்?

(ரகசியம் தொடரும் ...)


இருந்தாரா?  இல்லையா?


எம்டன் கப்பலில் வந்தவர்களின் பட்டியலில் செண்பகராமன் பெயர் இல்லாததால் அவர் அதில் பயணிக்கவில்லை என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால், தலைமறைவு போராளியாக இருந்த அவர் ரகசியம் கருதி உண்மையான பெயரை வெளியிடவில்லை என்று வரலாற்றாளர்கள் குறிப்பிடுகிறார்கள். கப்பலின் துணை கமாண்டரான மிக்கே என்பவர் எழுதிய எம்டன் பயணம் பற்றிய நூலில் தமிழர் ஒருவர் தங்களுக்கு உதவியாக இருந்தார் என்று கூறியிருக்கிறார். ஜெர்மனிய அரசரின் ஆலோசகராக திகழ்ந்த செண்பகராமனின் பெயரை வேண்டுமென்றே தான் பட்டியலில் சேர்க்காமல் இருந்திருக்கிறார்கள். இதனை அவரது மனைவி லட்சுமிபாய் பிற்காலத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் சிலர் சொல்வதைப் போல செண்பகராமன் மருத்துவம் பார்க்கும் டாக்டர் அல்லர். அவர் பொறியியல் படிப்பில் டாக்டர் பட்டம் வாங்கியவர்.

வெடிக்காத  குண்டு!

சென்னை உயர்நீதிமன்ற சுற்றுச்சுவரில் எம்டன் குண்டு போட்ட இடத்தில் இப்போது நினைவு கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. செயின்ட் ஜார்ஜ் கோட்டை மீது எம்டன் வீசிய குண்டு வெடிக்காமல் மணலில் புதைந்து கிடந்தது. அந்த குண்டை எடுத்து கோட்டை அருங்காட்சியகத்தில் வைத்திருக்கிறார்கள்.

***


Next Story