மத்திய, மாநில அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்:591 பேர் கைது


மத்திய, மாநில அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்:591 பேர் கைது
x
தினத்தந்தி 7 Feb 2017 10:30 PM GMT (Updated: 2017-02-08T02:35:26+05:30)

மத்திய, மாநில அரசை கண்டித்து மாவட்டத்தில் 12 இடங்களில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 331 பெண்கள் உள்பட 591 பேரை போலீசார் கைது செய்தனர்.

மறியல் போராட்டம் அறிவிப்பு

வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற் பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரத்தை விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வங்கி, ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு நீக்க வேண்டும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 7–ந்தேதி(அதாவது நேற்று) மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

விழுப்புரம்

அதன்படி விழுப்புரத்தில் கலெக்டர் அலுவலகம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதற்க வட்ட செயலாளர் ராஜூவ்காந்தி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு கீதா, நிர்வாகிகள் கண்ணப்பன், துரை, புருஷோத்தமன், அம்பிகாபதி, வீரமணி, நாகராஜ், சிவராமன், சிவலிங்கம், ரங்கநாதன், கிருஷ்ணராஜ், நீலா உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 19 பெண்கள் உள்ளிட்ட 48 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரன் தலைமையில் தாலுகா அலுவலகத்தின் நுழைவு வாயிலை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, சித்ரா, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணராஜ் உள்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 16 பேர் பெண்கள் ஆவார்கள்.

திண்டிவனம்

திண்டிவனத்தில் தலைமை தபால் அலுவலகம் முன்பாக மத்திய, மாநில அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் செய்தனர். இதற்கு வட்ட செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, மாவவ்ட குழு உறுப்பினர் கண்ணதாசன், வட்ட குழு உறுப்பினர்கள் யுவராஜ், அரசாங்கு, மண்ணு, குமார், தமிழ்முரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் தபால் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோ‌ஷங்களை எழுப்பியவாறு மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 30 பேரை திண்டிவனம் போலீசார் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

சங்கராபுரம்

சங்கராபுரம் வட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சங்கராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்துக்கு வட்ட செயலாளர் சசிகுமார் தலைமை தாங்கினார். உதயகுமார், ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிலையில் தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 58 பெண்கள் உள்பட 160 பேரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் அங்குள்ள உழவர் சந்தையில் இருந்து கோரிக்கைகளை வலிய தாலுகா அலுவலகத்தை நோக்கி வந்தனர். தொடர்ந்து தாலுகா அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் வாலன்டீனா தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் மணி, வட்ட செயலாளர் பெரியசாமி, சின்னசேலம் வட்ட செயலாளர் பழனி உள்பட பலர் கச்சேரியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தொடர்ந்து வங்கி முன்பு கள்ளக்குறிச்சி–சங்கராபுரம் மெயின்ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 90 பெண்கள் உள்பட 200 பேரை கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

செஞ்சி

மயிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் தலைமையில் கூட்டேரிப்பட்டு நான்குமுனை சந்திப்பு அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வக்கீல் கோதண்டம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இவர்களை அங்கிருந்த மயிலம் போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் 22 பெண்கள் உள்பட 98 பேரை போலீசார் கைது செய்தனர்.

செஞ்சியில் தபால் அலுவலகம் முன்பு சாலை மறியல் செய்ய முயன்ற முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி தலைமையில் வந்த மாவட்ட குழு மாதவன், வட்ட செயலர் நெடுஞ்சேரலாதன், மாவட்ட குழு முருகன் உள்பட 43 பேரை போலீசார் கைது செய்தனர்.

591 பேர் கைது

இதேபோல் கண்டமங்கலம், திருக்கோவிலூர், வானூர், மரக்காணம் என்று மாவட்ட முழுவதும் மொத்தம் 12 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இதன் மூலம் 331 பெண்கள் உள்பட 591 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story