என்ஜினீயரிங் மாணவரின் மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் கட்டி நவீன கருவி மூலம் அகற்றப்பட்டது
என்ஜினீயரிங் மாணவரின் மூளைக்குள் இருந்த கட்டி நவீன கருவி மூலம் அகற்றப்பட்டது என்று மதுரை ஹானாஜோசப் ஆஸ்பத்திரி டாக்டர் அருண்குமார் கூறினார்.
மதுரை,
ரத்தக்குழாய் கட்டி
மதுரை மாவட்டம் பூதக்குடி பகுதியை சேர்ந்தவர் அய்யனன், கூட்டுறவு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் கோகுலன்(வயது 18), தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக அடிக்கடி வலிப்பு மற்றும் கடுமையான தலைவலியால் கோகுலன் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மதுரை கே.கே.நகரில் உள்ள ஹானாஜோசப் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்தார். அங்கு கோகுலனுக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து பார்த்தபோது மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அதிக ரத்த ஓட்டம் காரணமாக ஏ.வி.எம். எனப்படும் ரத்தக்குழாய் கட்டி இருப்பது தெரியவந்தது.
நவீன கருவிஇந்த கட்டியை அகற்றுவது மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை என்றும், உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என டாக்டர்கள் கூறினர். இருப்பினும் இந்த அறுவை சிகிச்சை செய்து கொள்ள கோகுலன் மற்றும் அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதைதொடர்ந்து அவருக்கு பிளோரோசென்ஸ் கலர் ஆஞ்சியோகிராம் என்ற நவீன கருவி உதவியுடன் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாதவாறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை செய்த 2 மணி நேரத்திலேயே நோயாளி இயல்பு நிலைக்கு திரும்பினார். பொதுவாக 8 முதல் 10 மணி நேரம் வரை நடக்கும் இந்த அறுவை சிகிச்சை நவீன கருவி உதவியுடன் டாக்டர்கள் எம்.ஜே.அருண்குமார், கரோலின் ஜெபக்குமார், என்.அருண்குமார், ஜெர்மனியை சேர்ந்த சிறப்பு நிபுணர் குழுவினர் விரைவாக செய்து முடித்து சாதனை படைத்தனர்.
அறுவை சிசிக்சைஇதுகுறித்து ஹானாஜோசப் ஆஸ்பத்திரியின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர் எம்.ஜே.அருண்குமார் கூறியதாவது:–
சிறு வயதில் இருந்தே மாணவர் கோகுலனுக்கு இந்த பாதிப்பு இருந்துள்ளது. மண்டை ஓட்டை திறந்து, மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அறுவை சிகிச்சை செய்வது என்பது டாக்டர்களுக்கு சிக்கலான பணியாகும். இந்த அறுவை சிகிச்சையில் வெற்றி காண்பது என்பது பெரிய சாதனை ஆகும்.
கடந்த மாதம் எங்களது ஆஸ்பத்திரி அறுவை சிகிச்சை தியேட்டரில் ஜெர்மனி நாட்டின் தயாரிப்பான பிரைன்லேப் க்ரானியோ–ஸ்பைனல் நேவிகேசன் சிஸ்டம் நிறுவப்பட்டது. இந்த கருவியால் மூளையில் உள்ள கட்டியை துல்லியமாக கண்டறிய முடியும். பின்னர் பிளோரோசென்ஸ் கலர் ஆஞ்சியோகிராபி கருவி துணையுடன் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த கருவி இந்தியாவில் 5 முதல் 7 ஆஸ்பத்திரியில் மட்டும் தான் உள்ளது. எனவே தான் இது போன்ற சிக்கலான அறுவை சிகிச்சையை நவீன கருவிகள் மூலம் வெளிநாடுகளுக்கு இணையாக தென் இந்தியாவில் எங்களது ஆஸ்பத்திரியில் மட்டும் தான் செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.