அரசு பொது தேர்வில் சாதனை படைத்து பெருமை தேடித்தரவேண்டும் கலெக்டர் பேச்சு


அரசு பொது தேர்வில் சாதனை படைத்து பெருமை தேடித்தரவேண்டும் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 12 Feb 2017 4:30 AM IST (Updated: 12 Feb 2017 1:56 AM IST)
t-max-icont-min-icon

அரசு பொது தேர்வில் சாதனை படைத்து மாவட்டத்துக்கு பெருமை தேடித்தரவேண்டும் என்று கலெக்டர் கூறினார்.

மதுரை,

எதிர்காலம்

மதுரை மாவட்டம் கள்ளர் சீரமைப்புத் துறையின் சார்பில் செக்கானூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:–

மாணவர்களின் எதிர்காலம் என்பது பள்ளியில் தான் தொடங்குகிறது. ஒவ்வொரு மாணவ, மாணவியும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 வகுப்பில் பெறும் மதிப்பெண் தான் அவர்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நிகராக அரசு பள்ளி மாணவ, மாணவிகளும் மாநில அளவிலான இடங்களை பிடித்துள்ளனர். மாணவப் பருவத்தில் தான் சொல்லக்கூடிய ஒவ்வொரு வி‌ஷயமும் எளிதில் மனதில் பதியும். மாணவர் சமுதாயம் தங்களது கடமைகளை உணர்ந்து, பொறுப்புடன் செயல்பட்டால் எதிர்காலத்தில் வெற்றி பெற முடியும். நல்லொழுக்கத்துடன் பாடத்தில் முழுக்கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்கள் பெற்று மாணவர்கள் அனைவரும் நமது மதுரை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பல்வேறு தலைப்புகள்

மேலும் மதுரை நாடார் வித்தியாசாலை மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பிரின்ஸ்ராஜா “நாளை நம்(பிக்)கையில்“ என்ற தலைப்பிலும், செக்கானூரணி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராதாகிருஷ்ணன் “ஐ.டி.ஐ. படிப்புகள் மற்றும் திறன் பயிற்சி“ என்ற தலைப்பிலும், முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குனர் பிரபாகரன் “முப்படைகளில் முத்தான வாய்ப்புகள்“ என்ற தலைப்பிலும், லதாமாதவன் தொழில்நுட்ப கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல் துறை தலைவர் விமலா ரோஸ் “பட்டய பொறியியல் படிப்புகள்“ குறித்தும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தொண்டீஸ்வரன் “மருத்துவம் மற்றும் பொறியியல் சார்ந்த படிப்புகள்“ குறித்தும், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், மதுக்குமார் மற்றும் மணிகணேஷ் ஆகியோர் “கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்பும், வாய்ப்பும் “இ “ மத்திய மாநில அரசு பணி வாய்ப்புகள்“ குறித்தும் மாணவ, மாணவிகளிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.


Next Story