திருத்துறைப்பூண்டியில் ஒப்பந்தக்காரர் வீட்டில் நகை-பணம் திருட்டு


திருத்துறைப்பூண்டியில் ஒப்பந்தக்காரர் வீட்டில் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 12 Feb 2017 3:45 AM IST (Updated: 12 Feb 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில் ஒப்பந்தக்காரர் வீட்டில் நகை-பணம் திருடிய கொள்ளையனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

திருத்துறைப்பூண்டி,

ஒப்பந்தக்காரர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காந்திமுதலியார் நகரை சேர்ந்தவர் பாலு(வயது45). அரசு ஒப்பந்தக்காரர். இவருக்்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். வெளியூரில் படித்து வரும் அவரது மகள் ரெயில் மூலம் நேற்று முன்தினம் இரவு திருவாரூர் வந்தார். அவரை அழைத்து வருவதற்காக பாலு தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு ரெயில் நிலையத்துக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் இரவு 11 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது கொள்ளையன் ஒருவன் வீட்டில் இருந்த பொருட்களை திருடி கொண்டு, அதை மூட்டைக்கட்டி கொண்டு இருந்தார். இதை பார்த்த பாலு குடும்பத்தினர் திருடன், திருடன் என்று சத்தம் போட்டுள்ளனர். அவர்களின் சத்ததை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து கொள்ளையனை கையும், களவுமாக பிடித்து திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணை

இதில் அவர் திருத்துறைப்பூண்டி கழுவமுனி தெருவைச் சேர்ந்த கார்த்தி(24) என்பதும், இவர் மீது முத்துப்பேட்டை மற்றும் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. இந்த நிலையில் ஒப்பந்தக்காரர் பாலு வீட்டில் பொருட்களை சாரிபார்த்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த 5 பவுன் நகை, ரூ.1 லட்சம் மதிப்பிலான பாத்திரங்கள் மற்றும் பொருட்கள், ரூ.16 ஆயிரத்தை காணவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து பாலு திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், கமல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலு வீட்டில் கார்த்தி மட்டும் திருடினாரா? அல்லது அவரது கூட்டாளிகளிடம் திருடிய பொருட்களை கொடுத்து அனுப்பி விட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story