போடியில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து அ.தி.மு.க.வினர் ஊர்வலம்


போடியில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து அ.தி.மு.க.வினர் ஊர்வலம்
x
தினத்தந்தி 12 Feb 2017 4:00 AM IST (Updated: 12 Feb 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

போடியில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து அ.தி.மு.க.வினர் ஊர்வலம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

போடி,

போடியில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து அ.தி.மு.க.வினர் ஊர்வலம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களில் ஒரு தரப்பினர் பன்னீர்செல்வத்துக்கும், மற்றொரு தரப்பினர் சசிகலாவுக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து தேனி மாவட்டம் போடியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நேற்று போடியில் ஊர்வலமும் நடந்தது.

போடியில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் அலுவலகம் அருகே தொடங்கிய இந்த ஊர்வலத்தை நகர அவைத்தலைவர் கனல் காந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஒன்றிய அவைத்தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் போடி நகரசபை முன்னாள் தலைவர் பழனிராஜ், நகர துணைச்செயலாளர் ரமேஷ், ஒன்றிய நிர்வாகிகள் குருமணி, குறிஞ்சிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த ஊர்வலத்தில் போடி ஜமீன்தார் வடமலைராஜையா பாண்டியன், கண்ணன், ஏல விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் திருவள்ளுவர் சிலை, தேவர் சிலை வழியாக எம்.ஜி.ஆர். சிலையை அடைந்தது. ஊர்வலத்தில் வந்தவர்கள் தமிழக முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நீடிக்க வேண்டும் என்று கோஷமிட்டவாறு சென்றனர். ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தை முன்னிட்டு தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், போடி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபாகரன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story