குன்னூர் ரெயில் நிலையத்தில் மலைரெயிலில் செல்ல குவிந்த சுற்றுலா பயணிகள்


குன்னூர் ரெயில் நிலையத்தில் மலைரெயிலில் செல்ல குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 12 Feb 2017 3:45 AM IST (Updated: 12 Feb 2017 3:07 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் ரெயில் நிலையத்தில் நேற்று அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணிகள் திரும்பி சென்றனர்.

மலை ரெயில்

நீலகிரி மாவட்டத்திற்கு மலை ரெயில் என்பது பாரம்பரிய சின்னமாக இருப்பதோடு மாவட்டத்திற்கு சிறப்பை கூடுதலாக்குகிறது. இயற்கை காட்சிகள் சூழலில் மலைரெயில் வரும்போது ரெயிலில் பயணம் செய்யும் ரெயில் பயணிகள் இயற்கை காட்சிகளை முழுமையாக கண்டுகளிக்க முடிகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மலைரெயிலில் பயணம் செய்ய விரும்புகிறார்கள். குன்னூரில் இருந்து ஊட்டிக்கு காலை 7.45 மணி, மதியம் 12.30 மணி, மாலை 4.30 மணி என 3 பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு நீராவி என்ஜின் மூலம் இயக்கப்படும் மலைரெயில் குன்னூரை காலை 10.30 மணிக்கு அடைகிறது. பின்னர் இந்த ரெயில் ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறது. ஆக மொத்தம் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு 4 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. குன்னூரில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் அனைத்தும் டீசல் என்ஜின் மூலமாக இயக்கப்படுகிறது.

டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம்

கோவை, மேட்டுப்பாளையம், சேலம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கடும் வெயில் அடித்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் மலை ரெயிலில் பயணம் செய்ய 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குன்னூர் ரெயில் நிலையத்தில் குவிந்தனர். இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத் துடன் திரும்பி சென்றனர். 

Next Story