லாரி மீது அரசு பஸ் மோதல்; டிரைவர் உள்பட 10 பேர் படுகாயம்


லாரி மீது அரசு பஸ் மோதல்; டிரைவர் உள்பட 10 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 12 Feb 2017 4:30 AM IST (Updated: 12 Feb 2017 3:33 AM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டி அருகே ரோட்டோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதியதில் டிரைவர் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

பஸ் மோதியது

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ்சை கோபி தங்கமணி விரிவாக்க வீதியை சேர்ந்த ரவிக்குமார் (வயது 38) ஓட்டினார். கண்டக்டராக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெரியகள்ளிப்பட்டியை சேர்ந்த கோபால்ராஜ் இருந்தார். பஸ்சில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

நேற்று அதிகாலை 4.45 மணி அளவில் புஞ்சைபுளியம்பட்டியை அடுத்த நல்லக்காளிபாளையம் அருகே வந்தபோது ரோட்டோரம் நின்று கொண்டிருந்த லாரியின் முன்புறத்தில் எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மோதியது. இதில் பஸ் மற்றும் லாரியின் முன்புறம் சேதம் அடைந்தது.

10 பேர் படுகாயம்

இந்த விபத்தில் பஸ் டிரைவர் ரவிக்குமார், கண்டக்டர் கோபால்ராஜ், திண்டுக்கல் மாவட்டம் பீராம்பட்டியை சேர்ந்த பூ பாண்டி (33), விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பூலாம்பட்டி அம்பேத்கர் வீதியை சேர்ந்த முனியாண்டி (43), ராகாபாளையம் சேந்தன்மேட்டுப்பட்டியை சேர்ந்த நீராவி பாண்டியன் (28), பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த விஜயகுமார் மனைவி சுமதி (25), மதுரை மாவட்டம் மேல்நிலையம்மன் கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்த காளிதாஸ் (30), ஏலமணான் அம்பேத்கர் வீதியை சேர்ந்த நந்தினி (25), மதுரையை சேர்ந்த பேச்சிமுத்து, மகாராஜன் ஆகிய 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story