குண்டுமி– படுபித்ரி சுங்கச்சாவாடிகளை சுற்றி 144 தடை உத்தரவு


குண்டுமி– படுபித்ரி சுங்கச்சாவாடிகளை சுற்றி 144 தடை உத்தரவு
x
தினத்தந்தி 12 Feb 2017 3:45 AM IST (Updated: 12 Feb 2017 3:45 AM IST)
t-max-icont-min-icon

குண்டுமி மற்றும் படுபித்ரி சுங்கச்சாவடிகளை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மங்களூரு

கிராம மக்கள் தொடர் போராட்டத்தால் குண்டுமி மற்றும் படுபித்ரி சுங்கச்சாவடிகளை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பித்து உடுப்பி கலெக்டர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.

கிராம மக்கள் தொடர் போராட்டம்

உடுப்பி மாவட்டம் குந்தாபுரா அருகே சாஸ்தான் கிராமத்தில் குண்டுமி என்ற இடத்தில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடி குந்தாபுரா– மங்களூரு தலப்பாடி நெடுஞ்சாலையில் உள்ளது. சமீபத்தில் இந்த நெடுஞ்சாலை 4 வழிப்பாதையாக அமைக்கும் பணி நடந்தது. இந்த பணியின் போது சிறிய பாலங்கள் விரிவாக்கம், சாலை விரிவாக்கம் ஆகிய பணிகள் நடந்து வந்தன. மேலும் நெஞ்சாலையில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் இணைப்பு சாலைகள் சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் இந்த பணிகளை முழுமையாக முடிக்கவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் சாலை பணிகளை முழுமையாக முடிக்காமல் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதற்கு வாகன ஓட்டிகளும், குண்டுமி சுற்று வட்டார பகுதி மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை சாலை பணிகளை முழுமையாக முடிக்க சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

144 தடை உத்தரவு

அதேப் போல் உடுப்பி அருகே படுபித்ரி சுங்கச்சாவடி பகுதிகளிலும் நிலவுகிறது. இதனை கண்டித்து குண்டுமி மற்றும் படுபித்ரி சுங்கச்சாவடி பகுதிகளில் வசித்து வரும் கிராம மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் அந்தப் பகுதிகளில் வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இதைதொடர்ந்து குண்டுமி, படுபித்ரி சுங்கக்சாவடிகளை சுற்றி 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு 10–ந்தேதி (நேற்று முன்தினம்) நள்ளிரவு முதல் வருகிற 15–ந்தேதி நள்ளிரவு வரை 5 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உடுப்பி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.

முழுஅடைப்புக்கு அழைப்பு

மேலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அந்தப் சுங்கச்சாவடி பகுதிகளில் பொதுமக்கள் போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த அனுமதி கிடையாது. எனவே பொதுமக்கள் ஒத்துழைப்புக்கொடுக்கும் படி கலெக்டர் வெங்கடேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையே சாலை பணிகளை முழுமையாக முடிக்காமல் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நாளை(திங்கட்கிழமை) முழுஅடைப்பு போராட்டத்திற்கு படுபித்ரி மற்றும் குண்டுமி சுற்றுவட்டார கிராம மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதையொட்டி குண்டுமி, படுபித்ரி சுங்கச்சாவடி பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story