சந்தனமர கடத்தல் கும்பல் மீது வனத்துறை துப்பாக்கி சூடு வாலிபர் சாவு


சந்தனமர கடத்தல் கும்பல் மீது வனத்துறை துப்பாக்கி சூடு வாலிபர் சாவு
x
தினத்தந்தி 12 Feb 2017 4:03 AM IST (Updated: 12 Feb 2017 4:03 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு அருகே வனப்பகுதியில் சந்தனமர கடத்தல் கும்பல் மீது வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் வாலிபர் குண்டு பாய்ந்து செத்தார்.

மைசூரு,

மைசூரு அருகே வனப்பகுதியில் சந்தனமர கடத்தல் கும்பல் மீது வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் வாலிபர் ஒருவர் குண்டு பாய்ந்து செத்தார். மேலும் 7 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

சந்தன மரங்களை வெட்டிய கும்பல்

மைசூரு அருகே லிங்காபுதிகெரே கிராமத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரி வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் ஏராளமான சந்தனமரங்கள் வளர்ந்துள்ளன. இந்த வனப்பகுதியில் உள்ள சந்தனமரங்களை அடிக்கடி சில மர்மநபர்கள் வெட்டிக் கடத்திச் செல்கிறார்கள். இதை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் 8 பேர் கும்பல் லிங்காபுதிகெரே கிராமத்தை ஒட்டிய வனப்பகுதிக்குள் நுழைந்தனர். அவர்கள் சந்தன மரங்களை வெட்டிக் கொண்டு இருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினருக்கு, 8 பேர் கும்பல் சந்தனமரங்களை வெட்டிக்கொண்டு இருப்பது தெரியவந்தது.

துப்பாக்கி சூடு– வாலிபர் சாவு

இதைதொடர்ந்து வனத்துறையினர், அவர்களை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றனர். அந்த சமயத்தில் சந்தன மர கடத்தல் கும்பல், வனத்துறையினரை தாக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வனத்துறையினர் எச்சரிக்கை செய்தனர். இருப்பினும் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் அரிவாள், வாளால் வனத்துறையினரை வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களது கால்களை நோக்கி வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர்.

இதையடுத்து கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அப்போது கடத்தல் கும்பலை சேர்ந்த வாலிபர்ஒருவர் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அவருடன் வந்த 7 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

எச்.டி.கோட்டையை சேர்ந்தவர்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் குவெம்பு நகர் போலீசாரும், மைசூரு மாவட்ட வன அலுவலர் கரிகாலன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில், துப்பாக்கி சூட்டில் பலியானவர், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை டவுன் மகாதேவா காலனியை சேர்ந்த சங்கர் (வயது 32) என்பது தெரியவந்துள்ளது. அவரது உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து குவெம்பு நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய சந்தனமர கடத்தல் கும்பலை சேர்ந்த 7 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story