பெங்களூருவில் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து பண மோசடி
பெங்களூருவில், போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து பண மோசடி செய்ததாக வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 7 பேர் கைது.
பெங்களூரு
பெங்களூருவில், போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து பண மோசடி செய்ததாக வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 7 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பணம் மாயம்பெங்களூருவில் வசித்து வருபவர் பயால் மண்டல். இவருடைய வங்கி கணக்கில் இருந்து கடந்த 7–ந் தேதி ரூ.94 ஆயிரத்து 318 மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வங்கி அதிகாரிகளிடம் விசாரித்தார். அப்போது, ஏ.டி.எம். கார்டை ‘ஸ்வைப் மெஷின்‘ மூலம் பயன்படுத்தி அவருடைய வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் சம்பவம் குறித்து பானசவாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இந்த புகாரை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் மேலும் 10 பேர் தங்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் மாயமானதாக பானசவாடி போலீசில் புகார் செய்தனர். இந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
7 பேர் கைதுபணம் பறிபோன 11 பேரின் வங்கி கணக்கு, சமீபத்தில் அவர்கள் பணம் எடுத்த ஏ.டி.எம். மையங்கள் மற்றும் பண பரிவர்த்தனைகள் பற்றி முதற்கட்டமாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, புகார்தாரர்களான 11 பேரின் வங்கி கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப்பட்டது தொடர்பான சில விஷயங்கள் ஒத்துப்போயின. அந்த ஒற்றுமைகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி துப்பு துலக்கினர்.
அப்போது, வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும் நபர்களின் விவரங்களை முற்றிலுமாக அறிந்து கொண்ட மர்மநபர்கள் போலியாக ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து அந்த கார்டுகளை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, தீவிர விசாரணை நடத்திய போலீசார் பண மோசடியில் ஈடுபட்டதாக 7 பேரை கைது செய்து விசாரித்தனர்.
ரூ.21.40 லட்சம் பறிமுதல்விசாரணையில், கைதான 7 பேரில் 2 பெண்கள் உள்பட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் 6 பேர் என்பது தெரியவந்தது. மேலும் கைதானவர்கள் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்களான எரிமன் சுமார்ட் (வயது 33), கேனி (32), ஒலடிஜி ஒலஇமி (34), உகாண்டா நாட்டை சேர்ந்த மார்டின் சம்பா (25), ஜோலி என்ற நம்பூஜ் ஜோலி (23), தினா (23), பெங்களூருவை சேர்ந்த விக்ரம் ராவ் நிகம் (40) ஆகிய 7 பேர் என்பதும் தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து ரூ.21.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கென்யா நாட்டை சேர்ந்த ஹிலாரி கிஜன் உள்பட 7 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.