மக்களுக்கு மலிவான விலையில் தரமான மருந்துகள் வழங்குவதே அரசின் நோக்கம்
மக்களுக்கு மலிவான விலையில் தரமான மருந்துகளை வழங்குவதே அரசின் நோக்கம் என்று சித்தராமையா தெரிவித்து உள்ளார்.
பெங்களூரு,
மக்களுக்கு மலிவான விலையில் தரமான மருந்துகளை வழங்குவதே அரசின் நோக்கம் என்று முதல்–மந்திரி சித்தராமையா தெரிவித்து உள்ளார்.
கர்நாடகத்துக்கு வாய்ப்புகள் குவிகிறதுபெங்களூரு துமகூரு சாலையில் உள்ள பெங்களூரு பன்னாட்டு கண்காட்சி மையத்தில் நேற்று இந்திய மருத்துவ உபகரணங்கள் கண்காட்சி மற்றும் மருத்துவ மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த கண்காட்சி மற்றும் மாநாட்டை முதல்–மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்து பேசியதாவது:–
‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்‘ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த கண்காட்சி மற்றும் மாநாடு மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய திட்டத்திற்கு பெரிதும் பயன் உள்ளதாக இருக்கும். கர்நாடகத்தில் மருந்து உற்பத்தி தொழிலுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. மருந்து உற்பத்தி தொழிலின் மொத்த வர்த்தகம் ஆண்டுக்கு 300 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டதாக இருக்கிறது. இது அடுத்த 3 ஆண்டுகளில் 400 பில்லியன் அமெரிக்க டாலராக உயர வாய்ப்புள்ளது.
இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தரம், பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றன. இந்திய மருந்து உற்பத்தி தொழில் ஆண்டுக்கு 15 முதல் 20 சதவீத வளர்ச்சி அடைந்து, 2020–ம் ஆண்டுக்குள் சந்தை மதிப்பு 50 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அதிநவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் பயன்பாடும் அதிகரித்து கொண்டே சென்ற வண்ணம் உள்ளது.
ரூ.1.50 லட்சம் கோடி முதலீடுஇந்தியாவின் மொத்த மருத்துவ தேவைகளில் 75 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அவற்றில் 30 சதவீதம் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவின் மருந்து ஏற்றுமதி வருவாயில் 10 சதவீதம் கர்நாடகத்தில் இருந்து கிடைக்கிறது. நமது மாநிலத்தில் 230 மருந்து மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. உலக அளவில் பிரபலமான பல முன்னணி நிறுவனங்களும் கர்நாடகத்தில் இருக்கின்றன. மருந்து உற்பத்தி தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்க, அண்மையில் மருந்து உற்பத்தி கொள்கையை அரசு வகுத்தது.
கர்நாடக மக்களுக்கு மலிவான விலையில் தரமான மருந்துகளை வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் ஆகும். மருந்து உற்பத்தி தொழில் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி தொழிலுக்கு தனித்தனியே குழு அமைக்கப்படும். கர்நாடகத்தில் முதலீடு செய்வது எளிது என்பதால், 2016–ம் ஆண்டில் ரூ.1.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம். இதன்மூலம் முதலீடுகளை ஈர்ப்பதில் நாட்டில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு முதல்–மந்திரி சித்தராமையா பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் சதானந்தகவுடா, அனந்தகுமார், மாநில மந்திரிகள் தேஷ்பாண்டே, ரமேஷ்குமார், சரணபிரகாஷ் பட்டீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.