விமானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.54½ லட்சம் தங்க கட்டிகள் மீட்பு
விமானத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.54½ லட்சம் மதிப்புள்ளதங்க கட்டிகள் மீட்கப்பட்டுள்ளது.
மும்பை
விமானத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.54½ லட்சம் மதிப்புள்ளதங்க கட்டிகள் மீட்கப்பட்டுள்ளது. இதேபோல் பயணி ஒருவர் கடத்தி ரூ. 9 லட்சம் மதிப்புள்ள தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
350 கிராம் தங்கம் கடத்தல்மும்பை பன்னாட்டு விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் பாங்காக்கில் இருந்து விமானம் ஒன்று வந்து இறங்கியது. இதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த விமானத்தில் வந்த மும்பையை சேர்ந்த விமலேஷ் என்ற பயணியின் நடவடிக்கையில், சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே சுங்க அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர்.
அப்போது அவர் துணிக்குள் மறைத்துவைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்த 350 கிராம் தங்க நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிடிப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும். தங்கம் கடத்தி வந்த விமலேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமானத்தில் ரூ.54½ லட்சம் தங்கம்இதேபோல நேற்று அதிகாலை துபாயில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்திறங்கியது. இதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தவிர சோதனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து பயணிகள் இறங்கியபின்னர், விமானத்திலும் சோதனை செய்தனர். அப்போது, விமானத்தின் இருக்கை குழாயில் துணியில் சுற்றி வைக்கப்பட்டு இருந்த 18 தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் மதிப்பு ரூ.54 லட்சத்து 68 ஆயிரம் ஆகும். விமானத்தில் கடத்தல் தங்கத்தை மறைத்து வைத்துவிட்டு தப்பிச்சென்ற பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.