திருவண்ணாமலையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 845 வழக்குகளில் தீர்வு
திருவண்ணாமலையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 845 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 845 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுத்தீர்வு மையத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ஜி.தனராஜ் தலைமை தாங்கினார். மகளிர் நீதிமன்ற நீதிபதி மேரி அன்செலம், கூடுதல் உரிமையியல் நீதிபதி சாதிக்பாஷா, சிறப்பு சார்பு நீதிபதி பக்தவச்சலு, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமலதா டேனியல், நீதிபதிகள் மலர்கொடி, கே.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை குற்றவியல் நீதிபதி நாராஜா வரவேற்றார்.
இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி சார்ந்த வழக்குகள், சிவில் வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் என மொத்தம் 5 ஆயிரத்து 420 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.
ரூ.1½ கோடி உடனடி வசூல்அவற்றில் 845 வழக்குகளில் ரூ.8 கோடியே 83 லட்சத்து 19 ஆயிரத்து 286–க்கு தீர்வு காணப்பட்டு, ரூ.1 கோடியே 51 லட்சத்து 59 ஆயிரத்து 029 உடனடியாக வசூல் செய்யப்பட்டது.
மக்கள் நீதிமன்ற உறுப்பினர்களாக காந்திமதி, வேலு, வெர்ஜினியா வசந்தி ஆகியோர் செயல்பட்டனர். பொதுமக்கள் தங்கள் வக்கீலுடன் மக்கள் நீதிமன்றத்தில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் அண்ணாமலை செய்திருந்தார்.
ஆரணிஇதே போல் ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடந்தது. சார்பு நீதிபதி எஸ்.எழில்வேலவன் தலைமை தாங்கினார். இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மற்றும் கடன் பாக்கி தொடர்பாக 100 பேருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு தொடர்பாக 50 பேருக்கு ரூ.1 கோடியே 13 லட்சம் நஷ்டஈடாக வழங்க தீர்வு ஏற்பட்டது. அதே போல் கடன் பாக்கி தொடர்பாக 10 பேரின் வழக்கில் ரூ.39 லட்சம் வசூலிக்கப்பட்டு அந்த வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
முகாமில் வக்கீல் சங்க தலைவர் எஸ்.தனஞ்செயன், செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஏழுமலை, அரசு வழக்கறிஞர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.