திருவண்ணாமலை மாவட்ட அளவில் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு கலாசார போட்டிகள்


திருவண்ணாமலை மாவட்ட அளவில் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு கலாசார போட்டிகள்
x
தினத்தந்தி 12 Feb 2017 5:37 AM IST (Updated: 12 Feb 2017 5:37 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்ட பள்ளி மாணவ–மாணவிகளுக்கு வருகிற 15–ந் தேதி கலைப்போட்டிகள் நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட பள்ளி மாணவ–மாணவிகளுக்கு வருகிற 15–ந் தேதி கலைப்போட்டிகள் நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

கலைப்போட்டிகள்

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான கலாசார போட்டிகள் திருவண்ணாமலை பவழக்குன்று தெருவில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் வருகிற 15–ந் தேதி (புதன்கிழமை)நடக்கிறது.

போட்டிகள் குரலிசை, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், ஓவியம் ஆகிய பிரிவுகளில் நடக்கிறது. குரலிசை, பரதநாட்டிய போட்டிகள் காலை 10 மணிக்கும், ஓவியம், நாட்டுப்புற நடன போட்டிகள் மதியம் 2 மணிக்கும் நடைபெறுகிறது. இப்போட்டிகள் 5 முதல் 8 வயது வரை, 9 முதல் 12 வயது வரை, 13 முதல் 16 வயது வரை என 3 பிரிவுகளில் நடைபெறும்.

போட்டி விதிமுறைகள்

குரலிசை போட்டியில் மாணவர்களுக்கு 5 நிமிடங்கள் அனுமதிக்கப்படும். தமிழ் பாடல்கள், தேசபக்தி பாடல்களை அவர்கள் பாட வேண்டும். திரைப்பட பாடல்கள் பாட அனுமதியில்லை. பரதநாட்டியம், நாட்டுப்புற நடனத்தில் குழு நடனங்கள் அனுமதியில்லை. பக்க வாத்தியத்தையோ, ஒலி நாடாக்களையோ பயன்படுத்தி கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்பவர்கள் அதற்கான இசைக்கருவிகளை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

ஓவியப்போட்டியில் பென்சில், போஸ்டர் கலர், வாட்டர் கலர் பெயிண்டிங் என அனைத்து வகையிலும் ஓவியங்கள் வரையலாம். ஓவியம் வரைய தேவையான பொருட்களை போட்டியாளர்களே கொண்டு வர வேண்டும். போட்டி தொடங்கும்போது ஓவிய தலைப்புகள் அறிவிக்கப்படும்.

மாநில போட்டிக்கு தேர்வு...

மாவட்ட அளவிலான இந்த போட்டிகளில் முதல் மற்றும் 2, 3–ம் பரிசு பெறுபவர்களுக்கு பின்னர் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும். பரிசு பெறும் அவர்கள் மாநில போட்டிக்கு அரசு சார்பில் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், 2–ம் பரிசு 7 ஆயிரத்து 500–ம், 3–ம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.



Next Story