பலவன்சாத்து ஏரியில் சீமைகருவேல மரங்களை அகற்றிய இளைஞர்கள்


பலவன்சாத்து ஏரியில் சீமைகருவேல மரங்களை அகற்றிய இளைஞர்கள்
x
தினத்தந்தி 12 Feb 2017 5:39 AM IST (Updated: 12 Feb 2017 5:39 AM IST)
t-max-icont-min-icon

சமூக வலைதளம் மூலம் இணைந்த இளைஞர்கள் பலவன்சாத்து ஏரியில் சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்றினர்.

வேலூர்,

சமூக வலைதளம் மூலம் இணைந்த இளைஞர்கள் பலவன்சாத்து ஏரியில் சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்றினர்.

பலவன்சாத்து ஏரி

சமீப காலமாக இளைஞர்கள் எழுச்சியில் சமூக வலைதளம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி கேட்டு நடந்த போராட்டத்துக்கு சமூக வலைதளம் மூலம் இளைஞர்கள் இணைந்ததே காரணமாக அமைந்தது. அதேபோல் கடந்த வாரம் வேலூரில் உள்ள மிகப்பெரிய ஏரியான ஓட்டேரியில் நீர் தேக்குவதற்கு இடையூறாக இருக்கும் சீமைகருவேல மரங்களை அகற்றுவதற்காக சமூக வலைதளம் மூலம் இளைஞர்கள் இணைந்தனர். அதன்படி அவர்கள் 2 நாட்களாக அங்கு நீர்வளத்தை பாதிக்க செய்த கருவேல மரங்களை வேரோடு வெட்டி அகற்றினர்.

அந்த வரிசையில் மீண்டும் சமூக வலைதளம் மூலம் இணைந்த இளைஞர்கள் வேலூர் பலவன்சாத்து ஏரியில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்ற முடிவு செய்தனர்.

பலவன்சாத்து ஏரியானது சுற்றுவட்டார பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் ஏரிக்கு தற்போது நீர்வரத்து இல்லை. மேலும் கருவேல மரங்கள் முழுமையாக ஆக்கிரமித்துள்ளதால், ஏரியில் பெரும்பாலான பகுதிகளில் இருந்த தண்ணீர் உறிஞ்சப்பட்டு தற்போது குறைந்த அளவே தண்ணீர் காணப்படுகிறது.

சுமார் 30–க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பலவன்சாத்து ஏரியை ஆக்கிரமித்துள்ள சீமைகருவேல மரங்களை அகற்றி பராமரிப்பு பணியில் நேற்று ஈடுபட்டனர். இதனை மாநகராட்சி உதவி பொறியாளர் செல்வகுமார் தொடங்கி வைத்தார்.

இது குறித்து இளைஞர்கள் கூறியதாவது:–

சீமைகருவேல மரங்களை வெட்டி...

இந்த ஏரி, சீமை கருவேல மரங்களால் ஏரி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. எனவே அவற்றை அகற்ற முடிவு செய்தோம். முகநூலில் ‘இயற்கையின் தூண்கள்’ என்ற கணக்கு தொடங்கி இளைஞர்களின் ஆதரவை திரட்டினோம். இன்று (அதாவது நேற்று) அதற்கான முதற்கட்ட பணிகளை மேற்கொண்டுள்ளோம். நாளை வரை (அதாவது இன்று) இந்த பணி தொடரும். மேலும் இந்த ஏரி முழுவதும் ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்கள் அனைத்தும் வேரோடு வெட்டி அகற்றப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். இளைஞர்களின் இந்த பணி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.



Next Story