கவரும் கலைப் படைப்புகள்


கவரும் கலைப் படைப்புகள்
x
தினத்தந்தி 12 Feb 2017 12:38 PM IST (Updated: 12 Feb 2017 12:38 PM IST)
t-max-icont-min-icon

பெண்கள் அழகுணர்ச்சிமிக்கவர்கள். அவர்களைப் போன்று வீடும் அழகாக இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள். அதனால் வீட்டுக்கு அழகு சேர்க்கும் பொருட்களை தேடிப் பிடித்து வாங்குவார்கள்.

பெண்கள் அழகுணர்ச்சிமிக்கவர்கள். அவர்களைப் போன்று வீடும் அழகாக இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள். அதனால் வீட்டுக்கு அழகு சேர்க்கும் பொருட்களை தேடிப் பிடித்து வாங்குவார்கள். குறிப்பாக சமையல் அறையை அலங்கரிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள். புதிது புதிதாக சந்தைக்கு வரும் கண்கவர் வேலைப்பாடுகளை கொண்ட பாத்திரங்களை வாங்கி , சமையல் அறையில் அழகுற அடுக்கிவைப்பார்கள். அப்படிப்பட்ட பெண்களை திருப்திப்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்படுகிறது, ‘ப்ளூ பாட்டரி’ என்றழைக்கப்படும் அழகிய டிசைன் பதித்த சமையல் பாத்திரங்கள்.

உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள குர்ஜா என்ற பகுதியில் அதிக அளவில் தயாரிக்கப்படும் இந்த கைவினை பொருட்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கண்காட்சியை அலங்கரித்திருந்தன. அவைகளை பலரும் விரும்பி வாங்கினார்கள். ஏராளமான பெண்கள் ஒவ்வொரு பொருட்களையும் எடுத்து பார்த்து விட்டு, அவை எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கின்றன, அவைகளை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று விசாரித்தார்கள். விதவிதமாக வடிவமைக்கப்பட்ட டீ கப், ஜாடி, குடுவை, மளிகை பொருட்களை வைப்பதற்கான சிறிய கலன்கள், சமைத்த உணவை பரிமாறுவதற்கு ஏற்ற பாத்திரங்கள், செடி வளர்க்கும் தொட்டிகள், துளசி மாடங்கள், அறையை அலங்கரிக்கும் தோரணங்கள் உள்ளிட்ட கலைநயமிக்க பொருட்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

தனது சமையல் அறையை அழகுபடுத்தும் நோக்கில் பொருட் கள் வாங்கிக்கொண்டிருந்த சென்னை அண்ணாநகரை சேர்ந்த ஷாருதா சொல்கிறார்:

“இந்த சமையல் அறை அலங்கார பொருட்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு பயன்பாட்டிற்கும் ஏற்றதாக உள்ளன. இவைகள் கைகளை கொண்டு நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பிளாஸ்டிக் டப்பாக்களுக்கு பதிலாக இவைகளை பயன்படுத்தலாம். சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றது. சமையல் அறை பார்க்கவும் அழகாக இருக்கும். பிளாஸ்டிக் பாத்திரங்களில் அடைக்கப்படும் பொருட்கள் நாளடைவில் அதன் தன்மையையும், வாசத்தையும் இழந்துவிடும். சமைத்த சூடான ஆகாரத்தை பிளாஸ்டிக் பாத்திரங்களில் அடைத்து வைத்தால் அதன் சுவை மாறிப்போய்விடும். இவை கல் துகள்கள் கலந்த மண்ணில் தயார் செய்யப்பட்டிருப்பதால், உடல் நலனுக்கு ஏற்றது. சமைத்த உணவை டைனிங் டேபிளுக்கு எடுத்து சென்று பரிமாறுவதற்கும் சவுகரியமாக இருக்கும்” என்றார்.

வடமாநிலங்களில் அதிக அளவில் தயார் செய்யப்பட்டு பரவலாக விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த சமையல் அறை பொருட்களை கண்காட்சிகளில் விற்பனை செய்துவரும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ராஜேஷ் கூறுகையில், “எங்கள் பகுதியில் 400 ஆண்டுகளாக இந்தவகை கைவினை பொருட்கள் பாரம்பரியமாக தயார் செய்யப்பட்டு வருகின்றன. காலமாற்றத்திற்கு ஏற்பவும், பெண்களின் ரசனைக்கு ஏற்பவும் புதிய டிசைன்களை உருவாக்கி வருகிறோம். கைகளாலேயே நுணுக்கமாக வடிவமைக்கப்படுவதால் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது” என்கிறார்.

கண்காட்சியில் இடம்பெற்றிருந்த இரவு விளக்குகள் அழகிய உருவங்கள், டிசைன்களை உமிழ்ந்து பிரகாச புள்ளிகளாக ஜொலித்தன. படுக்கை அறை விளக்குகள், தொங்கு தோரண விளக்குகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. ராமர், கிருஷ்ணர், அனுமன், விநாயகர் உள்ளிட்ட சாமி உருவங்கள் ஈர்ப்புடன் ஒளிர்ந்தன. அவை தோலால் செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அவைகளின் வெளிப்புறங்களில் இடம்பெற்றிருந்த ஓவியங்கள் தத்ரூபமாக அமைந்திருந்தன. அவை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நிம்மலகுண்டா பகுதியில் தயாரிக்கப் படுபவை. அந்த விளக்குகளை வாங்கிய பெண்கள்..

“இந்த சுவர் விளக்குகள் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக் கிறது. தோலை மூலப்பொருளாக கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதால் நீண்ட நாட்களுக்கு உழைக்கும். அதன் வெளிப்புற டிசைன்கள் விளக்கு ஒளியில் பிரதிபலிப்பது அறைக்கு கூடுதல் அழகையும், பிரகாசத்தையும் கொடுக்கும். அதன் மூலம் கைவினை கலைஞர்களின் கடுமையான உழைப்பு வெளிச்சத்துக்கு வருகிறது. இதுபோன்ற பாரம்பரிய கலைகளை அழிய விடாமல் பாதுகாக்க வேண்டும் என்றால் இவர்களது படைப்புகளை வாங்கி ஊக்கப்படுத்தவேண்டும்” என்றார்கள்.

பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது அவர் களுக்கு துணையாக உடனிருக்கும் ‘ஹேண்ட் பேக்குகளை’ பனை ஓலையை கொண்டே வடிவமைத்து ஆச்சரியப்படுத்தி இருந்தார், பொன்னம்மாள். இவர் நாகர்கோவிலை அடுத்த புன்னையடி கிராமத்தை சேர்ந்தவர். சிறுவயதில் இருந்தே தனது சகோதரி தங்கஜோதியுடன் சேர்ந்து பனை ஓலையில் விதவிதமான பொருட்களை தயார் செய்து வருவதாக கூறுகிறார்.

“ஆரம்பத்தில் பனை ஓலையில் சிறியவகை பெட்டிகள், தட்டுகள், கூடைகள் செய்து வந்தோம். புதிது புதிதாக ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பது என்னுடைய பொழுதுபோக்கு. பனை ஓலையில் செய்த கூடையை எப்படி மெருகேற்றலாம் என்று யோசித்தபோதுதான் தோல் பையை போலவே ‘ஜிப்’வைத்து தயாரிக்கும் எண்ணம் தோன்றியது. ஆனால் பார்ப்பதற்கு பனை ஓலையில்தான் செய்யப்பட்டிருக்கிறது என்பது தெரியக்கூடாது என்பதற்காக நிறைய மெனக்கெட்டேன். வழக்கமாக கூடை பின்னுவது போல் இல்லாமல் வித்தியாசமான முடிச்சுகளை போட்டு டிசைன்களை உருவாக்கினேன். அது பார்ப்பதற்கு அழகாக தெரிந்து கூடையின் தரத்தை ‘பேக்காக’ மாற்றிவிட்டது. ஒரு பேக் செய்வதற்கு ஆறு நாட்கள் ஆகும். பனை ஓலை மட்டுமின்றி தாளம் பூ இலையில் பாய், வால் ஹேங்கிங் போன்றவற்றை தயாரித்து வருகிறோம். தற்பொழுது புது முயற்சியாக அன்னாச்சிப்பழ இலையில் கம்மல், வளையல்கள் செய்து வருகிறோம்” என்றார்.

பனை ஓலை ‘ஹேண்ட் பேக்கை’ ஆச்சரியமாக எடுத்து பார்த்து கொண்டிருந்த திருப்பூரை சேர்ந்த சித்ரா சொல்கிறார்:

“வீணாக தூக்கி வீசப்படும் பனை ஓலையில் அலங்கார பொருட்களை செய்வது பாராட்டுவதற்குரிய விஷயம். இதுபோன்ற ‘ஹேண்ட் பேக்கை’ இப்பொழுதுதான் முதன் முதலாக பார்க்கிறேன். அற்புதமாக வடிவமைத்து இருக்கிறார்கள். பனை ஓலையில் பூங்கொத்தே உருவாக்கிவைத்திருக்கிறார்கள். அது இயற்கையான பூ போலவே இருக்கிறது” என்றார்.

Next Story