செய்துங்கநல்லூரில் மாட்டு வண்டி பந்தயம் வேடிக்கை பார்த்த விவசாயி மாடு முட்டி சாவு


செய்துங்கநல்லூரில் மாட்டு வண்டி பந்தயம் வேடிக்கை பார்த்த விவசாயி மாடு முட்டி சாவு
x
தினத்தந்தி 13 Feb 2017 2:00 AM IST (Updated: 12 Feb 2017 4:58 PM IST)
t-max-icont-min-icon

செய்துங்கநல்லூரியில் நேற்று நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தின் போது, வேடிக்கை பார்த்த விவசாயி மாடு முட்டி பலியானார்.

ஸ்ரீவைகுண்டம்,

செய்துங்கநல்லூரியில் நேற்று நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தின் போது, வேடிக்கை பார்த்த விவசாயி மாடு முட்டி பலியானார்.

மாட்டு வண்டி பந்தயம்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் திருமலை நம்பி கோவில் உள்ளது. இந்த கோவில் கொடை விழாவை முன்னிட்டு அந்த பகுதியில் ஆண்டு தோறும் ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடப்பது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக, இந்த போட்டி நடக்கவில்லை.

இந்த ஆண்டு கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது. போட்டி நேற்று காலை 8 மணிக்கு, திருச்செந்தூர்– நெல்லை சாலையில் செய்துங்கநல்லூர் யூனியன் அலுவலகம் முன்பு தொடங்கியது. இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 20 மாட்டு வண்டிகளுடன் வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த பந்தயத்தை பார்ப்பதற்காக செய்துங்கநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போட்டி நடக்கும் இடத்தில் குவிந்திருந்தனர்.

விவசாயி

செய்துங்கநல்லூர் அருகே உள்ள நாட்டார்குளத்தை சேர்ந்தவர் விவசாயி அந்தோணி சாமி (வயது 50). இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர் நேற்று காலையில், திருச்செந்தூர்– நெல்லை சாலையில் செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையம் அருகே கூட்டத்துடன் கூட்டமாக நின்று, மாட்டு வண்டி பந்தயத்தை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார்.

மக்கள் கூட்டத்தில்...

அப்போது செய்துங்கநல்லூரை சேர்ந்த ராஜ்பாண்டியன் என்பவர் ஓட்டி வந்த மாட்டு வண்டி, கட்டுக்கடங்காமல் திருச்செந்தூர்– நெல்லை சாலையில் போவதற்கு பதிலாக, போலீஸ் நிலையம் அருகே இருந்த பொதுமக்கள் கூட்டத்துக்குள் பாய்ந்தது. இதனால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், அலறி அடித்து கொண்டு சிதறி ஓடினர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அந்தோணி சாமியை மாடு முட்டி தூக்கி வீசியது.

விவசாயி சாவு

தூக்கி வீசப்பட்டத்தில் தார் சாலையில் விழுந்த அந்தோணிசாமி, தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அவரை அங்கு இருந்த பொதுமக்கள் மீட்டு, பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அந்தோணி சாமி பரிதாபமாக உயிர் இழந்தார்.

இது குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விவசாயி அந்தோணி சாமியை முட்டி கொன்ற மாடு, கடந்த ஆண்டு நடந்த போட்டியில் ஜோடி மாட்டுடன் சேர்ந்து முதல் பரிசு பெற்ற மாடு என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story