வெயிலில் இருந்து கோவில் யானைகளை பாதுகாக்க துணியால் ஆன பந்தல்கள் அமைப்பு
மேட்டுப்பாளையம் யானைகள் நலவாழ்வு முகாமில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து கோவில் யானைகளை பாதுகாக்க துணியால் ஆன பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முகாமில் தமிழகத்தில் உள்ள திருக்கோவில்கள், திருமடங்களை சேர்ந்த 33 யானைகள் கலந்து கொண்டு உள்ளன.
யானைகளுக்கு தினமும் காலை, மாலை நடைபயிற்சி, குளியல், ஊட்டச்சத்து, மருந்து மாத்திரை கலந்த சரிவிகித உணவு, பசுந்தீவனங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவக்குழுவினரால் யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. தற்போது கோவை பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக முகாம் அமைந்துள்ள இடத்தில் வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலில் இருந்து தப்பிக்க போதிய மர நிழல்கள் இல்லாமல், யானைகள் அவதியடைந்து வந்தன.
துணியால் ஆன பந்தல்இதனை கருத்தில் கொண்டு வெயிலில் இருந்து யானைகளை பாதுகாக்க துணியால் ஆன பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் இளம்பரிதி உத்தரவின் பேரில் உதவி ஆணையர் ஆனந்த், வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர் ராமு ஆகியோர் மேற்பார்வையில் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக பார்வையிட முகாமிற்கு வந்த வண்ணம் உள்ளனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் யானைகள் நலவாழ்வு முகாமில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கோவில் யானைகளை பார்த்து ரசித்தனர். முகாமில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை யானைகளை பார்க்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.