கோடை காலம் தொடங்கும் முன்பே சுட்டெரிக்கும் வெயில் இரவில் கடுங்குளிர் நிலவுவதால் பொதுமக்கள் அவதி


கோடை காலம் தொடங்கும் முன்பே சுட்டெரிக்கும் வெயில் இரவில் கடுங்குளிர் நிலவுவதால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 13 Feb 2017 3:45 AM IST (Updated: 13 Feb 2017 12:29 AM IST)
t-max-icont-min-icon

கோடை காலம் தொடங்கும் முன்பே ஊட்டியில் வெயில் சுட்டெரிக்கிறது. இரவில் கடுங்குளிர் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர்.

உறைபனிப்பொழிவு

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் பருவமழை பெய்கிறது. இங்கு பெய்யும் மழைநீர் பல்வேறு அணைகளில் தேக்கி வைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னர் இந்த தண்ணீர் பவானிசாகர் அணைக்கு கொண்டு செல்லப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக ஊட்டியில் பருவநிலை மாறி காணப்படுகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தற்போது வரை மழையும், உறைபனிப்பொழிவும் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

சுட்டெரிக்கும் வெயில்

ஊட்டியில் பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில்தான் வெயிலின்தாக்கம் அதிகமாக காணப்படும். ஆனால் தற்போது ஊட்டியில் கடந்த 3 நாட்களாக கோடை காலத்திற்கு இணையாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. மேலும் இரவில் கடுங்குளிர் நிலவுகிறது. ஊட்டியில் நேற்று பகலில் 22 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்கு வெயில் சுட்டெரித்தது. ஆனால் இரவில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்கு சென்றது.

குறைந்தபட்ச வெப்பநிலை காரணமாக ஊட்டியில் தொடர்ந்து பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் தேயிலை செடிகள், காய்கறி செடிகள், புற்கள் வேகமாக கருகி வருகின்றன. ஊட்டியில் அதிகாலை நேரத்தில் புற்களின் மீது படர்ந்து காணப்படும் உறை பனிப்பொழிவை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.

பகல் நேரத்தில் வெயில் சுட்டெரிப்பதால் சுற்றுலா பயணிகள், மாணவிகள் வெயிலில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள குடையை பிடித்தபடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து மாவட்டத்தில் வெயில் அடித்து வருவதால் அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக வறண்டு வருகின்றன. கோடை காலம் தொடங்கும் முன்பே ஊட்டியில் வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கடும் அவதி அடைந்து உள்ளனர்.


Next Story