சசிகலா–பன்னீர்செல்வம் இடையே அதிகார போட்டி நடக்கிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு


சசிகலா–பன்னீர்செல்வம் இடையே அதிகார போட்டி நடக்கிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு
x
தினத்தந்தி 13 Feb 2017 4:00 AM IST (Updated: 13 Feb 2017 12:30 AM IST)
t-max-icont-min-icon

சசிகலா–பன்னீர்செல்வம் இடையே அதிகார போட்டி நடக்கிறது சட்டசபையை கவர்னர் உடனடியாக கூட்டி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

கூடலூர்

சசிகலா–பன்னீர்செல்வம் இடையே அதிகார போட்டி நடக்கிறது. இதனால் சட்டசபையை கவர்னர் உடனடியாக கூட்டி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

பொதுக்கூட்டம்

நீலகிரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டம், கட்சி நிதியளிப்பு விழா கூடலூர் காந்தி திடலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

கேரளாவில் நிலம்பூர் ஜமீன் வசம் இருந்த 1 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி அதில் விவசாயம் செய்து வந்த விவசாயிகளுக்கு பட்டா வழங்கி பெருமைப்படுத்தியது அப்போது முதல்–அமைச்சராக இருந்த இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு அரசு. அதேபோல் கூடலூர் பகுதியில் நிலம்பூர் ஜமீன் வசம் இருந்த 88 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மட்டுமே போராட்டம் நடத்தி வருகிறது.

ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்

தி.மு.க.– அ.தி.மு.க. என 2 ஆட்சிகள் தமிழகத்தை மாறி மாறி ஆண்டு வருகிறது. இருப்பினும் பட்டா வழங்கவில்லை. இன்றைக்கு தமிழகத்தில் உள்ள நிலையை பார்க்கும்போது கிரிக்கெட் போட்டி ஸ்கோர் போல் சசிகலா, பன்னீர்செல்வம் அணிகளுக்கு யார் ஆதரவு தருகிறார்கள் என டி.வி.கள் முன்பு மக்கள் அமர்ந்திருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.

விவசாயிகள் தற்கொலை, குடிநீர் தட்டுப்பாடு என மக்கள் பிரச்சினைகளை தீர்க்க சசிகலா, பன்னீர்செல்வத்துக்கு கவலை இல்லை. அவர்கள் இடையே அதிகார போட்டி நிலவுகிறது. 100 ஆண்டுகளில் இல்லாத வறட்சி தமிழகத்தில் இப்போது காணப்படுகிறது. பயிர்கள் விளைச்சல் இல்லாமல் போனதால் 200 விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர். இதனால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். மேலும் நஷ்டம் அடைந்த பயிர்களுக்கான இழப்பீடு இதுவரை வழங்கப்படவில்லை.

சட்டசபையை கூட்ட வேண்டும்

தமிழகத்தில் இன்றைக்கு அரசு நிர்வாகம் முழுமையாக ஸ்தம்பித்துள்ளது. ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த சசிகலா ஆட்சி, அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். இதன் மூலம் ஆயிரம் ஏக்கர் கொண்ட கோடநாடு எஸ்டேட் உள்பட பல ஆயிரம் கோடிக்கு சொத்துகளை வாங்கி வைத்துள்ளார். ஜெயலலிதா இறந்து 2 மாதங்கள் மட்டுமே ஆகிறது. மேலும் உச்சநீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வர உள்ளது. அதுவரை சசிகலா காத்திருக்க முடியாதா?. ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்ற முதல்–அமைச்சராக அவசரம் காட்டி வருகிறார்.

தி.மு.க., அதி.மு.க. ஆட்சியில் கனிம வளம், தாதுமணல், கிரானைட் கொள்ளை நடைபெற்று உள்ளது. அரியலூரில் தலித் பெண் நந்தினி, சென்னை அருகே 6 வயது சிறுமி சுகாசினி ஆகியோர் பாலியல் கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டு உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போராட்டம் நடத்திய பின்னரே போலீசார் நடவடிக்கை எடுத்தனர். தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையை வைத்து கவர்னர் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பார்க்கிறார். தமிழகத்தில் நிலவும் அதிகார போட்டியை முடிவுக்கு கொண்டு வர சட்டசபையை கவர்னர் உடனடியாக கூட்டி வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story