பன்றிக்காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை புதுவை அரசு சுகாதாரத்துறை அறிவிப்பு


பன்றிக்காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை புதுவை அரசு சுகாதாரத்துறை அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Feb 2017 3:00 AM IST (Updated: 13 Feb 2017 1:00 AM IST)
t-max-icont-min-icon

பன்றிக்காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுவை அரசு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

பன்றிக்காய்ச்சல்

புதுச்சேரி அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை பன்றிக்காய்ச்சல்நோய் பரவுவதை தடுக்க கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், சமுதாய நலவழிக்கூடங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள், சுகாதார ஊழியர்களுக்கு பன்றிக்காய்ச்சல், அதனால் ஏற்படும் பாதிப்புகள், மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அனைத்து மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்கள், பன்றிக்காய்ச்சல் சந்தேகத்திற்குரிய நோயாளிகளை புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் உள்ள நுண்ணுயிரியல் நிபுணர்கள், நோயாளியின் தொண்டையில் உள்ள தொற்று மாதிரியை சேகரித்து ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.

சிகிச்சைக்கு ஏற்பாடு

பன்றிக்காய்ச்சல் நோய் மிதமாக பாதித்தவர்களுக்கு கோரிமேட்டில் உள்ள அரசு மார்பக மருத்துவமனை சிறப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்படும். தீவிரமாக தாக்கப்பட்டு சுவாச கோளாறு ஏற்பட்டவர்கள், புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும்.

பன்றிக்காய்ச்சல் நோய்க்கான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். இந்நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து நோயின் பாதிப்பை தடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்படும்.

துணை இயக்குனர் (பொது சுகாதாரம்) இந்நோயை கண்காணிக்கும் தலைமை அதிகாரியாக செயல்படுவார். இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் அரசு மார்பக மருத்துவமனைகளில் இந்நோயிற்கான கட்டுப்பாட்டு அறைகள் செயல்படும்.

இந்நோயிற்கான ஒசில்டமவீர் மாத்திரை, அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகள், சமுதாய நலவழிக்கூடங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கபசுர குடிநீர் வழங்கப்படும்.

செய்ய வேண்டியவை

பன்றிக்காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள எப்போதும் கையில் சுத்தமான துணி வைத்திருக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய துணியை மீண்டும் பயன்படுத்த வேண்டாம். அந்த துணியை குப்பைத்தொட்டியில் போட வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். பழங்கள், காய்கறிகளை அதிகமாக சாப்பிட வேண்டும். சுத்தமான தண்ணீரை அதிகமாக குடிக்க வேண்டும். நோய்க்கான அறிகுறி ஏதாவது இருந்தால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.

செய்யக்கூடாதவை

பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. புகைப்பிடித்தல் மற்றும் கைக்குலுக்குதல் தவிர்க்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும். சுயமாக மருந்து மாத்திரைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story