தோண்டப்பட்ட சாக்கடை கால்வாய்கள் மூடப்படாததால் நோய் பரவும் அபாயம்


தோண்டப்பட்ட சாக்கடை கால்வாய்கள் மூடப்படாததால் நோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 13 Feb 2017 1:54 AM IST (Updated: 13 Feb 2017 1:54 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரையில் தூர்வார தோண்டப்பட்ட சாக்கடை கால்வாய்கள் மூடப்படாததால் நோய் பரவும் அபாயம்

மானாமதுரை,

மானாமதுரையில் தூர்வார தோண்டப்பட்ட சாக்கடை கால்வாய்கள் மூடப்படாததால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த விசயத்தில் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சுகாதார சீர்கேடு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் சுகாதாரம் கடுமையாக பாதிக்கபட்டு உள்ளன. இதனால் மர்மக்காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்படைய வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர். தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில், நியமிக்கப்பட்டுள்ள தனி அதிகாரிகள், அலுவலர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் எங்கேயும் செல்லாமல் வார்டுகளில் என்ன பிரச்சினை என்று தெரியாமல் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேரூராட்சி பகுதியில் சாக்கடை நீர் முறையாக செல்லாததால் வாய்க்கால்களில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்தனர்.

மூடப்படாத கால்வாய்கள்

இந்தநிலையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கண்ணாடிகாரர் தெரு, பாகவத் அஹ்கராம், ஆனந்தவல்லி அம்மன் கோவில் அருகே உள்ள தெருக்களில் சாக்கடை கால்வாய்களை தூர்வாரப்பட்டது. அப்போது சாக்கடை நீர் முறையாக செல்வதற்காக, கால்வாய்கள் உடைக்கப்பட்டு பணிகள் நடந்தன. ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை, தூர்வாரும் பணியை பாதியில் போட்டுவிட்டு பேரூராட்சி பணியாளர்கள் சென்றுவிட்டனர். இதனால் கால்வாய்களில் கூடுதலாக சாக்கடை நீர் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மேலும் தோண்டப்பட்ட சாக்கடை கால்வாய்கள் மூடப்படாததால், கால்வாய்கள் அருகில் செல்லும் குடிநீர் குழாய்களில் சாக்கடை கலந்துவிடுகிறது. இதனால் வீடுகளுக்கு வினியோகமாகும் தண்ணீரில் துர்நாற்றம் வீசுகிறது. சில இடங்களில் வீடுகளுக்கு முன்பு கால்வாய்கள் தோண்டப்பட்டு உள்ளதால், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரப்பி வருகின்றன.

எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்ககை எடுக்க வேண்டும் என்று மானாமதுரை பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story