கல்லால் தாக்கி டீ மாஸ்டர் கொலை பரோட்டா கடை உரிமையாளர் உள்பட 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
கல்லால் தாக்கி டீ மாஸ்டர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை கோரிப்பாளையம் முகமதியார் தெருவை சேர்ந்தவர் பக்கீர் முகமது. இவருடைய மகன் இப்ராகிம் (வயது 46). டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர் மீது நகரில் உள்ள காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இப்ராகிம், அந்த பகுதியில் இட்லிக்கடை நடத்தி வரும் ரம்ஜான் பேகத்துடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து ரம்ஜான் பேகம், அருகில் உள்ள பரோட்டா கடை உரிமையாளர் செய்யது இப்ராகிம் மற்றும் பரோட்டா மாஸ்டர்கள் இஸ்மாயில், ரகு ஆகியோரிடம் கூறினார். இதைதொடர்ந்து அவர்கள் இதுபற்றி இப்ராகிமிடம் கேட்டனர்.
4 பேருக்கு வலைவீச்சுஅப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ரம்ஜான் பேகம், செய்யது இப்ராகிம், இஸ்மாயில், ரகு ஆகியோர் சேர்ந்து இப்ராகிமை கல்லால் தாக்கினர். மேலும் அவரை தோசை கரண்டியாலும் தாக்கியதாக தெரிகிறது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.