சென்னையில் போலீஸ் சோதனை 105 ரவுடிகள் கைது


சென்னையில் போலீஸ் சோதனை 105 ரவுடிகள் கைது
x
தினத்தந்தி 13 Feb 2017 3:30 AM IST (Updated: 13 Feb 2017 2:53 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் போலீஸ் சோதனையில் 105 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

சமூக விரோதிகள்

ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு இரு பிரிவாக செயல்படுகின்றனர். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், இதை பயன்படுத்தி சமூக விரோதிகள் மற்றும் ரவுடிகள் சென்னையில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக உளவு பிரிவு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இதையொட்டி நேற்று முன்தினம் இரவு சென்னை நகர் முழுக்க போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். ரவுடிகள் யாராவது தங்கி இருக்கிறார்களா என்பதை கண்டறிய சென்னையில் உள்ள 1,340 லாட்ஜூகளிலும் 540 திருமண மண்டபங்களிலும் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

105 பேர் கைது

சென்னை முழுவதும் முக்கிய சாலை சந்திப்புகளில் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது. சென்னை முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீஸ் சோதனையில் 105 ரவுடிகளும் மற்றும் பழைய குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செங்குன்றம் அருகே தஞ்சம்

போலீஸ் நடவடிக்கை எதிரொலியாக சென்னை வியாசர்பாடி, சர்மாநகர், எண்ணூர், கொடுங்கையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரவுடிகள் சிலர், செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாகாத்தம்மன் நகர், பெருமாள்அடிபாதம், ஆட்டந்தாங்கல், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் தஞ்சம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களில் 6 பேர் நேற்று முன்தினம் நள்ளிரவில் குடிபோதையில் 3 மோட்டார் சைக்கிள்களில் கையில் பட்டாக்கத்திகளுடன் அந்த பகுதியில் உள்ள தெருக்களில் கலாட்டா செய்தபடி சென்றனர். இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

இதுபற்றி அந்த பகுதி பொதுமக்கள் சோழவரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் அந்த பகுதிகளில் ரவுடிகள் யாரும் தங்கி உள்ளனரா? என அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். 

Next Story