பெங்களூருவில் நாளை தொடங்குகிறது 11–வது சர்வதேச விமான தொழில் கண்காட்சி
பெங்களூருவில் 11–வது சர்வதேச விமான தொழில் கண்காட்சியை ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் தொடங்கி வைக்கிறார்.
பெங்களூரு,
பெங்களூருவில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 11–வது சர்வதேச விமான தொழில் கண்காட்சியை ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் தொடங்கி வைக்கிறார்.
விமான தொழில் கண்காட்சிஇந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு சார்பில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான தொழில் கண்காட்சி பெங்களூருவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 11–வது சர்வதேச விமான தொழில் கண்காட்சி நாளை(செவ்வாய்க்கிழமை) பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் தொடங்குகிறது. 18–ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் தொடங்கி வைக்கிறார்.
இதில் 270 இந்திய நிறுவனங்கள், 279 வெளிநாட்டு நிறுவனங்கள் என மொத்தம் 549 நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 27 ஆயிரத்து 678 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 72 விமானங்கள் இதில் பங்கேற்கின்றன. இந்த கண்காட்சியை வெளிநாட்டினர் உள்பட 2 லட்சம் வர்த்தக பார்வையாளர்கள் பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமானப்படை தளபதிஇதில் விமானத்துறை மந்திரி அசோக் கஜபதி ராஜூ, ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர், அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி சவுத்திரி, மத்திய திறன் வளர்ச்சி மற்றும் தொழில்முனைவோர் துறை இணை மந்திரி ராஜீவ் பிரதாப்ரூடி, ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பி.எஸ்.தனோனா, ராணுவத்துறை செயலாளர் மோகன்குமார் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கண்காட்சியின் போது ஆந்திர மாநில அரசு சார்பில் ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் இந்திய விமானவியல் முதலீட்டாளர்கள் மாநாடு, விமானவியல் துறையில் இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் நிகழ்ச்சி போன்றவை நடக்கின்றன. கர்நாடகம், ஆந்திரா, குஜராத், கேரளா போன்ற மாநிலங்களில் சிறப்பு அரங்குகள் அமைத்துள்ளன. இதன் மூலம் தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்க அந்த மாநிலங்கள் திட்டமிட்டுள்ளன. பக்ரைன், வங்காளதேசம், பிரேசில், புருனே, எகிப்து, பிரான்சு, ஜெர்மனி, இந்தோனேஷியா, ஜெர்மனி உள்பட 65 நாடுகளை சேர்ந்த அரசு பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்இந்த விமான கண்காட்சியையொட்டி விமான சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இதை கண்டுகளிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த சாகச நிகழ்ச்சி தினமும் மாலை நேரத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதையொட்டி கண்காட்சி நடைபெறும் எலகங்கா விமானப்படை தளத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.