தேனி கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய் கேனுடன் தீக்குளிக்க வந்த பெண்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டம் நடந்து கொண்டு இருந்த போது, கலெக்டர் அலுவலகத்துக்கு பெண் ஒருவர் தனது கையில் மண்எண்ணெய் கேனை தூக்கி வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தேனி மாவட்டம், கெங்குவார்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி மகள் கலைச்செல்வி (வயது 21) என்பதும், அவர் தீக்குளித்து தற்கொலை செய்வதற்காக மண்எண்ணெயை எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.
பின்னர், மாவட்ட கலெக்டரிடம் கலைச்செல்வி ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், ‘எனக்கு கடந்த 29–6–2015 அன்று திருமணம் நடந்தது. எனது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு, எனது பெற்றோர் வீட்டுக்கும் அனுப்பி விட்டனர். இது குறித்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. போலீசுக்கு பணம் கொடுத்து விட்டதாகவும், தன் மீது நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என்றும், எனது கணவர் கொலைமிரட்டல் விடுகிறார்’ என்று கூறி இருந்தார். இந்த மனு மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதியளித்தார். இதையடுத்து கலைச்செல்வி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.