கொடைக்கானலில் கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை பலி
கொடைக்கானலில், கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை பலியானது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான காட்டெருமைகள் உள்ளன. அவை அவ்வப்போது நகர் பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. அதனை வனத்துறையினர் விரட்டும் சம்பவம் வாடிக்கையாக நடந்து வருகிறது. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் தண்ணீரை தேடி காட்டெருமைகள் நகருக்குள் புகுந்த வண்ணம் இருக்கின்றன.
அவ்வாறு தண்ணீரை தேடி வரும் காட்டெருமைகள் சில நேரங்களில் உயிரிழக்கவும் நேரிடுகிறது. கடந்த மாதம் அரசு போக்குவரத்து கழகம் பகுதியில் உள்ள உறை கிணறு ஒன்றில் தவறி விழுந்த காட்டெருமை பலியானது.
கிணற்றில் விழுந்து பலிஇந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தண்ணீரை தேடிவந்த காட்டெருமை ஒன்று பாக்கியாபுரம் பகுதியில் உள்ள தனியார் கிணற்றில் தவறி விழுந்து இறந்து கிடந்தது. நேற்றுகாலை அந்த வழியாக சென்றவர்கள் அதைப்பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் தீயணைப்பு படையினரின் உதவியுடன் கிணற்றில் இறந்து கிடந்த காட்டெருமையின் உடலை மீட்டனர். இதையடுத்து அதன் உடலை பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘இறந்து கிடந்தது 7 வயதுடைய பெண் காட்டெருமையாகும். தண்ணீரை தேடி வந்தபோது கிணற்றில் தவறி விழுந்து இறந்துள்ளது. அதன் உடல் பரிசோதனைக்கு பிறகு காட்டெருமையின் உடல் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது’ என்றனர்.
ஏரிச்சாலையில் உலாஇதற்கிடையே நேற்று காலையும் 5 காட்டெருமைகள் ஏரிச்சாலை பகுதியில் உலா வந்தன. இதனால் அந்த வழியாக வந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். மேலும் வாகனங்களில் வந்தவர்கள் ஆங்காங்கே நிறுத்திவிட்டு தப்பியோடினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் காட்டெருமைகள் தானாக அந்த பகுதியில் உள்ள தனியார் தோட்டத்திற்குள் சென்றன.