கலெக்டர் அலுவலகத்தில் கணவன், மனைவி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி
உறவினர் வசம் உள்ள தங்களின் நிலத்தை மீட்டுத்தரக்கோரி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கணவன், மனைவி தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை கலெக்டரிடம் கொடுத்து சென்று வந்த வண்ணம் இருந்தனர்.
அப்போது கையில் பையுடன் ஒரு தம்பதி மனுக்கள் பதிவு செய்யும் இடம் அருகே வந்து நின்றனர். திடீரென அவர்களில் ஆண் நபர் பையில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதைப் பார்த்து அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடோடி சென்று அந்த நபரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி அந்த தம்பதியை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
நிலத்தை மீட்டு தரக்கோரிவிசாரணையில் அவர்கள் திட்டக்குடி தாலுகா வதிஸ்டபுரம் வண்டிக்காரத்தெருவை சேர்ந்த கொத்தனார் அசோகன்(வயது 47), அவரது மனைவி செல்லம்மாள்(43) என்பதும், உறவினர் வசம் உள்ள தங்களின் 5½ சென்ட் நிலத்தை மீட்டு தரக்கோரி ஏற்கனவே கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியேரிடம் பல முறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் கணவன், மனைவி இருவரும் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.
பின்னர் அந்த தம்பதியை கலெக்டரிடம் போலீசார் அழைத்து சென்றனர். அவர்களிடம் கோரிக்கை குறித்து கேட்டறிந்த கலெக்டர் ராஜேஷ் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அந்த தம்பதிக்கு உரிய அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பதாகையை கையில் ஏந்திசிதம்பரம் தாலுகா துற்கொஞ்சிகொல்லை கிழக்கு தெருவை சேர்ந்த பாவாடை(வயது 36), இவரது மாமியார் கொளஞ்சி ஆகியோர் தங்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்காத சேத்தியாத்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதகையை கையில் ஏந்தியபடி குறைகேட்பு கூட்டத்துக்கு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
தமிழ்நாடு ஊராட்சி குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்க மாநில தலைவர் ராமர் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் அனைத்து கிராம மோட்டார் இயக்குபவர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.1,000 வழங்க உத்தரவிட வேண்டும். இல்லை என்றால் அடுத்த மாதம்(மார்ச்) 6–ந் தேதி கலெக்டரிடம் பெருந்திரள் முறையீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனைஇந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சந்திரமோகன், கிளை செயலாளர் கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் ராஜேசிடம் கொடுத்த மனுவில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி மாணவ–மாணவிகள் விடுதிகளில் மாதம் ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும், பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும், பாதுகாவலர்கள் தினமும் பாடம் எடுக்க வேண்டும், செய்தித்தாள்கள் வருவதை உத்திரவாதப்படுத்த வேண்டும், சுத்தமான குடிநீர், உணவு வழங்குவதை உத்திரப்படுத்த வேண்டும், கடலூர் பஸ்நிலையத்தில் இருந்து முதுநகர் வரை குண்டும், குழியுமாக உள்ள சாலையை போர்க்கால அடிப்படை சரிசெய்து தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.