பலியான பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடுகோரி சாலை மறியல்
சின்னமனூர் அருகே சீலையம்பட்டியில் நடந்த விபத்தில், பலியான பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்கவேண்டும் என்று, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள பல்லவராயன்பட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு விட்டு, போலீசார் திரும்பி சென்றனர். அப்போது அவர்கள் சென்ற வேனும், அரசு பஸ்சும் சீலையம்பட்டி அருகே நேருக்கு நேர் மோதியது. பின்னர் அந்த வேன் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதியதில் சின்னமனூரை சேர்ந்த மேரி என்ற மாரியம்மாள் என்பவர் பலியானார்.
இந்த விபத்தில் அவருடைய கணவர் மணிகண்டன் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பலியான மேரியின் உடல் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவருடைய உடலை உறவினர்கள் வாங்க மறுத்து தேனி– குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சமரச பேச்சுவார்த்தைதகவலறிந்த போடி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபாகரன், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விபத்தில் படுகாயம் அடைந்த மணிகண்டன் தற்போது சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருவதாகவும், அவரை தேனிக்கு இடமாற்றம் செய்யவேண்டும் எனவும், அவருடைய மனைவி பலியானதற்கு இழப்பீடாக போலீஸ் வேனை ஓட்டி வந்த டிரைவரின் 5 ஆண்டு சம்பளத் தொகையை வழங்கவேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விபத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு, மேரியின் உடலை பெற்றுக்கொண்டு கலைந்து சென்றனர்.