இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் மரக்காணம் தாலுகா ஏந்தூர் கிராமம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் 50–க்கும் மேற்பட்டோர் வந்தனர். இவர்கள் அனைவரும் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்களில் சிலரை மாவட்ட கலெக்டரிடம் அழைத்துச்சென்றனர்.
வீட்டுமனைப்பட்டாஅப்போது கலெக்டரிடம் அவர்கள் கூறுகையில், நாங்கள் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர்கள். எங்கள் பகுதியில் 300 குடும்பத்தினர் உள்ளனர். இவர்களில் 137 குடும்பத்தினர் வீட்டுமனைப்பட்டா இல்லாமல் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இதே கிராமத்தில் நிரந்தரமாக வசித்து வருகிறோம்.
எங்கள் பகுதியில் அரசு புறம்போக்கு இடங்கள் அதிகளவில் உள்ளது. அந்த இடத்தில் எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே தாங்கள் இதில் தலையிட்டு எங்களுக்கு அரசின் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனர்.
இதனை கேட்டறிந்த கலெக்டர் சுப்பிரமணியன், இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதை ஏற்ற பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.