காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.வை காணவில்லை போலீசில் பெண்கள் புகார் மனு
காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.வை காணவில்லை என்று அந்த தொகுதியை சேர்ந்த பெண்கள் போலீசில் புகார் மனு அளித்துள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை முதல்–அமைச்சராக தேர்ந்தெடுப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்.எல்.ஏ.க்கள் சென்னையை அடுத்த கல்பாக்கம் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொகுதி பிரச்சினை குறித்து எம்.எல்.ஏ.வை சந்தித்து மனு அளிக்க வரும் மக்கள் அவர்களை சந்திக்க முடிவதில்லை. இதனால் பல இடங்களில் எம்.எல்.ஏ.க்களை காணவில்லை, கடத்தப்பட்டனர் என்று கூறி அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வரும் முருகுமாறனை காணவில்லை என்று அந்த தொகுதியை சேர்ந்த பெண்கள் போலீசில் புகார் செய்துள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு:–
கண்டுபிடித்து தரவேண்டும்காட்டுமன்னார்கோவில் புளியந்தோப்பு தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மனைவி லதா(வயது 35). இவர் அந்த பகுதியை சேர்ந்த 20 பெண்களுடன் நேற்று காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்துக்கு சென்று தொகுதி எம்.எல்.ஏ. முருகுமாறனை காணவில்லை என்று புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் அ.தி.மு.க.வை சேர்ந்த முருகுமாறன். எங்கள் பகுதியில் நிலவும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து முருகுமாறன் எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து மனு கொடுக்க அவரது அலுவலகத்திற்கு கடந்த 10–ந்தேதி சென்றோம். ஆனால் அன்றைய தினம் அவர் அங்கு இல்லை. இந்த நிலையில் தொடர்ந்து அவரை சந்திக்க முயற்சித்த போது, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்து இருந்த நிலையிலும் அங்கு முருகுமாறன் எம்.எல்.ஏ. இல்லை. எனவே காணாமல் போன முருகுமாறன் எம்.எல்.ஏ.வை தாங்கள் கண்டுபிடித்து தரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து லதா நிருபர்களிடம் கூறுகையில், நாங்கள் அளித்த மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரை நேரில் சந்தித்து மனு அளிப்போம் என்று தெரிவித்தார்.