குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் காத்திருக்கும் போராட்டம் நடத்துவோம்:கிராம மக்கள் மனு


குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் காத்திருக்கும் போராட்டம் நடத்துவோம்:கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 14 Feb 2017 4:00 AM IST (Updated: 14 Feb 2017 2:27 AM IST)
t-max-icont-min-icon

பணிக்கனேந்தல் கிராமத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் காத்திருக்கும் போராட்டம் நடத்துவோம் கலெக்டரிம் கிராம மக்கள் மனு

 

விருதுநகர்

காரியாபட்டி யூனியன் பணிக்கனேந்தல் கிராமத்தில் குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணாவிட்டால் யூனியன் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்தப்போவதாக கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

100 நாள் வேலை

கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியின் போது காரியாபட்டி யூனியன் பணிக்கனேந்தல் கிராம மக்கள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் குறிப்பிட்டு இருப்பதாவது:–

100 நாள் வேலை திட்டத்தின்கீழ் கிராம மக்கள் 130 பேர் பதிவு செய்து வேலை பார்த்து வருகிறோம். இதுவரை 40 முதல் 60 நாள் வரை வேலை பார்த்தவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இந்த வேலையினையே வாழ்வாதாரமாக கொண்டு வசித்து வரும் நாங்கள் ஊதியம் கிடைக்காததால் வறுமையில் வாடி வருகிறாம். இது பற்றி பல முறை யூனியன் அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. அன்றாட செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல் திண்டாடி வருகிறோம். எனவே எங்களுக்கு 100 நாள் வேலை திட்ட ஊதியம் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீர் பிரச்சினை

மேலும் எங்கள் கிராமத்தில் குடிநீர் பிரச்சினை கடுமையாக உள்ளது. குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் தனியாரிடம் விலை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலையில் இருந்து வருகிறோம். கால்நடைகளுக்கும் குடிக்க தண்ணீர் இல்லை. எங்களுக்கு மற்ற புழக்கத்திற்கும் தண்ணீர் கிடைப்பது இல்லை. எனவே எங்களது குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 17–ந்தேதி காரியாபட்டி யூனியன் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story