மத்திய அரசு, கவர்னரை பொம்மையாக பயன்படுத்துகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மத்திய குழு உறுப்பினர் பேட்டி
தமிழக அரசியல் சூழலில் கவர்னரை மத்திய அரசு பொம்மையாக பயன்படுத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி கூறினார்.
குறை கேட்பு கூட்டம்
ராஜபாளையம் அருகே சேத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக நெசவாளர்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு 148 கைத்தறி நெசவாளர் சங்கத்தின் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் வாசுகி கலந்து கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது;–
நெசவாளர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்கப்படவில்லை. சேத்தூர் பகுதியை சுற்றி 5 நெசவாளர் சங்கங்கள் உள்ளன. 5 சங்கங்களையும் சேர்த்து 2 ஆயிரத்து 500–க்கும் மேற்பட்டோர் நெசவு தொழிலை செய்து வருகிறார்கள். 6 மாதம் இலவச வேட்டி, சேலையினையும் மீதி 6 மாதம் பள்ளி இலவச சீருடைகளையும் நெய்து கொடுக்கிறார்கள். இலவச வேட்டி, சேலை நெய்யும் போது 300 முதல் 500 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். ஆனால் பள்ளிச் சீருடைகள் நெய்யும்போது ரூ.100 லிருந்து ரூ.150 வரைதான் கிடைக்கும். பள்ளிச் சீருடைகளுக்கு அரசு கொடுக்கக்கூடிய கூலி மிகமிகக் குறைவு.
மேலும் ஆரம்பத்தில் தனியார் இன்சூரன்ஸ், மருத்துவக் காப்பீடு அரசால் வழங்கப்பட்டது. வருடம் முழுவதும் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தது. ரூ.7,500 ஒவ்வொரு நெசவாளர்களுக்கும் தொகையாக கிடைத்து வந்துள்ளது. தற்போது வேறு நிறுவனத்திற்கு அரசு மருத்துவக் காப்பீடை வழங்கிவிட்டதால் முன்பு கொடுத்த அட்டையைக் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு சென்றால் பெயர் இல்லையென்று கூறுவதோடு சிகிச்சை தர மறுக்கிறார்கள். நெசவாளர்கள் தெரிவித்த இந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும்.
பொம்மைதற்போதைய தமிழக அரசியல் நிலவரத்தில் சட்டமன்றம் கூட்டப்பட்டு, வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மை உடையவர்கள் மதிப்பீடு செய்ய வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. கவர்னர் காலம் தாழ்த்துவதால் அவருக்கு பின்னால் பா.ஜனதா அரசு இருக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
கவர்னர் காலம் தாழ்த்துவதால் சட்டப் பேரவை உறுப்பினர்களை குதிரை பேரம் பேசி விலைக்கு வாங்கும் நிலை உருவாகி உள்ளது. சுப்பிரமணியசாமி, சசிகலாவை ஆதரிப்பதும், பா.ஜனதா தலைவர்கள் முதல்–அமைச்சர் பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதும் தமிழகத்தில் பா.ஜனதா காலூன்றுவதற்கான அரசியல் யுக்தியாக பார்க்கப்படுகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு கவர்னர் இருக்க வேண்டும் என்ற நிலை மாறி, மத்திய அரசின் அரசியல் பொம்மலாட்டத்தில் அவர் பொம்மையாக பயன்படுத்தப்படுகிறார்.
ஆதரவு இல்லைகடந்த 10 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நெசவாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படவில்லை. குடிநீர் தட்டுப்பாடு, வறட்சி, விவசாயிகள் தற்கொலை உள்ளிட்ட பற்றி எரியும் பல்வேறு பிரச்சினைகள் தமிழகத்தில் இருக்கும் போது, அ.தி.மு.க. சொத்துகளை யார் கைப்பற்றுவது என்ற போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க. கொள்கைகளை பொறுத்த வரை இரு தரப்பிலும் கட்சிக்கு ஏராளமான விமர்சனங்கள் உண்டு. இதனால் நாங்கள் யாரையும் ஆதரிக்கவில்லை.
தற்போது அ.தி.மு.க. கட்சியில் உடைசல் ஏற்பட்டுள்ள நிலையை, எதிர்க்கட்சியான தி.மு.க.வும், பா.ஜனதாவும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, தங்கள் கட்சியை ஆட்சியில் அமர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் மகாலட்சுமி, ஜோதிலட்சுமி, மேற்கு ஒன்றிய செயலாளர் ராமர், கமிட்டி உறுப்பினர் நீராத்திலிங்கம், சேத்தூர் நகர செயலாளர் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.