கோவையில் குளங்கள் வறண்டன நிலத்தடி நீர்மட்டம் 1,000 அடிக்கு கீழ் சென்றது
கோவையை உள்ள குளங்கள் வறண்டதால் நிலத்தடி நீர் மட்டம் 1,000 அடிக்கு கீழ் சென்றது.
கோவை நகர பகுதியில் நரசாம்பதி குளம், முத்தண்ணன்குளம், உக்கடம் பெரியகுளம், குறிச்சி குளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம், செல்வசிந்தாமணி குளம், செங்குளம் ஆகிய 8 குளங்களும், புறநகர் பகுதிகளில் சூலூர், கண்ணம்பாளையம், நீலாம்பூர், செம்மாண்டபாளையம் உள்ளிட்ட 20 குளங்களும் உள்ளன. மொத்தம் உள்ள 28 குளங்களில் 5 குளங்களில் கோவையின் கழிவுநீர் கலந்துள்ளது. மற்ற குளங்கள் அனைத்தும் வறண்ட நிலையில் உள்ளன.
செங்குளம் உள்ளிட்ட குளங்கள் தண்ணீர் முழுவதும் வற்றி கால்பந்தாட்ட மைதானம் போல் காணப் படுகிறது. குளங்கள் வற்றியதால் கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் மளமளவென்று குறைந்துள்ளது.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:–
1,000 அடிக்கு கீழ் சென்றதுகோவையை சுற்றி உள்ள 28 குளங்களும் வறண்ட நிலையில் உள்ளன. ஒரு சில குளங்களில் கழிவுநீர் சூழ்ந்துள்ளது. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதாலும், மழை பெய்யாததாலும் குளங்கள் வறண்டு போகும் நிலையை எட்டி வருகிறது. குளக்கரையில் நிலத்தடி நீர் மட்டம் ஓரளவு உள்ளது. ஆனால் குளங்களுக்கு அப்பால் 1,000 அடிக்கு கீழ் நிலத்தடி நீர் மட்டம் சென்று விட்டது.
கோவை காந்திபுரம், ரேஸ்கோர்ஸ், கோவைப்புதூர், மதுக்கரை, போத்தனூர், சூலூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துள்ளது. மழைநீர் சேகரிப்பு திட்டங்களை மேலும் தீவிரப்படுத்துவதுடன், மழைக்காலங்களில் தண்ணீர் பூமிக்குள் இறங்குவதற்கு வசதியாக பல இடங்களில் ஆழ்குழாய் நீர் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்படும்.
பொதுமக்கள் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்த முன் வர வேண்டும். மழை பெய்து, குளங்கள் நிரம்பினால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டுப்பாடுகோவையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில், தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள் ளிட்ட பல பகுதிகளில் 1,500 அடிக்கும் கீழ் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் உறிஞ்சி எடுக்கப் படுகிறது. இதனால் அருகில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆழ் குழாய் கிணறுகள் அமைப்பதில் விதிமுறைகள் இருந்தாலும், அது கடைபிடிக்கப்படுவது இல்லை.
ஆனாலும், அதிகாரிகள் போதிய அளவு கண்காணிக்காததால் ஆழ் குழாய் கிணறுகளை அமைப்பதில் விதிமுறைகள் மீறப்படுகிறது. இது தவிர ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தண்ணீரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதும் அதிகரித்து வருகிறது. இதில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.